துரோகமிழைக்க தோல்வியடைந்த அரசுடன் இணைந்த ஹாபிஸ் நஸீர் அஹமட்
துரோகமிழைக்க தோல்வியடைந்த அரசுடன் இணைந்த ஹாபிஸ் நஸீர் அஹமட்

சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப்சம்சுடீன்

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தோல்வியடைந்த அரசின் அமைச்சராகி மக்களுக்குத் துரோகம் இழைத்துள்ளார்”.

இவ்வாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், கிழக்கிலங்கையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிப்சம்சுடீன் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் நேற்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சர்களுள் ஒருவராகப் பதவி ஏற்றுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்த்தரான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி இந்த அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுள்ளமை பெரும் துரோகத்தனமானது எனவும் கண்டனம் தெரிவித்தார்.

உயர் பீட உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் மேலும் கருத்து வெளியிடுகையில் பின்வருமாறு கூறினார்.

“முஸ்லிம் மக்களின் ஏகோபித்த நம்பிக்கையை வென்ற முஸ்லிம் காங்கிரஸின் உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மக்களின் நல்லபிமானம், நம்பிக்கையிலிருந்து தோற்றுப்போன இன்றைய அரசின் அமைச்சுப் பொறுப்பொன்றை ஏற்று அரசுக்கு முட்டுக்கொடுத்துள்ளமை பெரும் துரோகத்தனமாகும்.

அவரது இந்த பதவி ஏற்பு கட்சிக்கட்டுப்பாட்டை மீறிய துரோகத்தனமானதும், கண்டணத்திற்குரிய செயற்பாடுமாகும்.

இத்தகையவருடன் தோல்வி கண்ட அரசுக்கு முட்டுக்கொடுத்தவருடன் சேர்ந்து பணியாற்றியமை குறித்தும் வெட்கமடைகின்றேன்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ஏற்கனவே 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு இந்த அரசுக்கு ஆதரவாக வாக்களித்து முட்டுக்கொடுத்த முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டை மக்கள் பெரும் துரோகத்தனமாகவே கருதுகின்றனர்.

இவர்கள் ஊழலில்லாமலா வாக்களித்தனரென்பது மக்களின் கேள்வியாகும்.

அவர்கள் கட்சிக்கும், நம்பி வாக்களித்த மக்களுக்கும் இழைத்த மாபெரும் தவறும், துரோகத்தனமும் இதுவாகும்.

நியாயமற்ற இவர்களது செயற்பாட்டுக்கு பிராயச்சித்தமே இல்லையென்பதே யதார்த்தமாகும்.

மேலும், மக்கள் நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில், தொடரும் இன்றைய தன்னெழுச்சிப் போராட்ட நிலமைக்கு தலைசாய்த்து ஜனாதிபதி பதவி விலகுவதுடன், ஆட்சி அதிகாரத்திலிருந்து அரசும் ஒதுங்கி வழிவிட வேண்டும்” என்றார்.

துரோகமிழைக்க தோல்வியடைந்த அரசுடன் இணைந்த ஹாபிஸ் நஸீர் அஹமட்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)