
posted 7th April 2022
இலங்கையில் யுத்த சூழ்நிலையில் இலங்கையிலிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்து சுமார் 32 வருடங்களாக தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் வசித்து வரும் மக்களின் குடியுரிமை கோரிக்கை பற்றிய விழிப்புணர்வையும், அதை செய்வதற்கான உந்துதலையும் ஏற்படுத்த வேண்டிய ஒரு தேவையை உணர்ந்து, இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு கலை இலக்கியப் போட்டிகளை முன்னெடுத்து, குடியுரிமை கோரிக்கை கவனயீர்ப்பை முன்னெடுத்ததாக திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் டேவிட் அனோஜன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் டேவிட் அனோஜன் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் காரணமாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தவர்களும், அவர்களுக்கு குழந்தைகளாக பிறந்தவர்களும், இந்திய பிரஜைகளை திருமணம் செய்து கொண்டவர்கள் என சுமார் ஒரு இலட்சம் இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ள 103 மறுவாழ்வு முகாம்களில் கடந்த 32 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
எங்களுக்கு அரசு பல்வேறு உதவிகளையும், நலத்திட்டங்களையும் தொடர்ந்து செய்து வருகிறது. எப்போதும் அரசு வழங்கும் நிவாரணத்தை மட்டுமே எதிர்பார்க்காமல், எங்களது சொந்த முயற்சியிலும் உழைப்பிலும் எங்கள் எதிர்காலத்தை வளமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக எங்கள் அனைவருக்குள்ளும் வேட்கையாய் இருந்து வருகிறது. அந்தக் கனவுகள் அனைத்தும் குடியுரிமை என்ற ஒற்றைப் புள்ளியில் களைந்து போவதை அனைவரும் உணர்ந்துகொண்டோம். எனவே, குடியுரிமை வேண்டும் என்ற கருத்தை பல்வேறு காலகட்டங்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாக வெளிப்படுத்தி வந்தோம். ஆனால், அவை உரிய முறையில் அரசுகளின் கவனத்திற்கு சென்றடையவில்லை.
மக்கள் ஒன்றுபட என்றுமே ஒரு வலுவான காரணமும், வேட்கையும் வேண்டும் என்ற நியதிப்படி, எங்களது குடியுரிமை கோரிக்கையை ஒன்றுபட்டு வெளிப்படுத்துவது என்ற தேவை, காலத்தினால் எம்மக்களிடம் ஏற்பட்டது.
குடியுரிமை கோரிக்கை பற்றிய விழிப்புணர்வையும், அதை செய்வதற்கான உந்துதலையும் ஏற்படுத்த வேண்டிய ஒரு தேவை இருந்தது. உணர்வின்றி, உணர்ச்சியின்றி வாழ்ந்து பழகியிருந்த காலகட்டத்தில், நம்மில் ஓர் உத்வேகத்தை கொண்டுவர வேண்டிய ஒரு வெற்றிடம் இருந்தது.
அதை மக்களாக ஒன்றிணைந்து, அதன் தேவை மற்றும் வழிமுறைகளை கண்டறியும் விதமாக நமக்குள்ளேயே கலந்துபேசி தெளிவடையவும் எங்கள் கோரிக்கையை அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணும் நோக்குடனும் விழிப்புணர்வு குழு எனும் தன்னார்வ குழு அமைந்தது. நவீன தொழில்நுட்ப ஊடகம் மூலம் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
இக்குழுவின் மூலமாக மக்களின் குடியுரிமை கோரிக்கை, நாடு திரும்ப விரும்பும் மக்களின் பிரச்சினைகள் போன்றவற்றை அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகிறோம்.
அதுமட்டுமல்லாமல், பல்வேறு கவன ஈர்ப்பு நிகழ்வுகளையும் நடத்தி வருகிறோம். அண்மையில் குடியுரிமைப் பொங்கல் என்று அனைத்து மறுவாழ்வு முகாம்களிலும் நடத்தி மாபெரும் கவன ஈர்ப்பையும் நிகழ்த்தியுள்ளோம். இதன் ஒரு அங்கமாகத்தான் இந்திய ஜனநாயக பேரரசின் 73 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு மறுவாழ்வு முகாம்களுக்கு இடையேயான கலை இலக்கிய போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டது குடியுரிமை என்பதை மையக் கருத்தாக தலைப்புகள் கொடுத்து படைப்புகள் வரவேற்கப்பட்டன.
போட்டிகளை அறிவித்தாலும், படைப்புகள் எப்படி இருக்குமோ என்ற ஐயம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்குள்ளும் இருக்கவே செய்தது. படைப்புகள் மாணவர்களிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும் வரத்தொடங்கியதும் அந்த அச்சம் நீங்கி உற்சாகம் பிறந்தது.
கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கென ஒரு அடையாளத்தை தேடும் ஒரு சமூகத்தின் அனுபவ மொழிகள் இந்த போட்டிகளின் மூலம் ஆக்கம் பெற்றிருந்தன. சிந்தனையின் ஆழமும், தர்க்கத்தின் வலிமையும், இலக்கிய மணமும் கொண்ட படைப்புகள் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், சிறுகதைகள் மற்றும் ஓவியங்களாகவும் வந்தன.
அகதிகள் சமூகத்தில் ஒரு புதிய தலைமுறை எப்படிப் பன்முகம் கொண்ட பரிமானங்களோடு உருவாகி வருகிறது என்பதற்கு சான்றுகளாக அவர்களின் படைப்புகள் இருந்தன. விதைகள் எவ்வளவு வீரியமானதாக இருந்தாலும், அது முளைக்கவும் பலன் தரவும் வளமான மண் வேண்டும் என்பதைப்போல, தங்கள் ஆக்கங்களையும் திறமைகளையும் வெளிப்படுத்த கிடைத்த சரியான களமாக இந்த வாய்ப்பு அவர்களுக்கு அமைந்தது என்பதை தங்கள் படைப்புகள் மூலம் நிரூபித்து இருந்தார்கள்.
இதில் ஆச்சரியம் தரும் செய்தி என்னவென்றால், அகதி வாழ்வின் வலிசுமந்த வேதனைகளையும், குடியுரிமையின் அவசியத்தையும் அழுத்தமாக பதிவு செய்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் இந்தியாவில் பிறந்தவர்கள் என்பதுதான்.
எந்த ஒரு சமுதாயத்திலும் எப்போது எடுத்துக்கொண்டாலும் மூன்று தலைமுறையேனும் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக, தந்தை, மகன், பேரன் என்று எடுத்துக்கொள்ளலாம். முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வரலாறு திரும்பும் என்ற நியதிக்கு ஏற்ப, கடந்த 32 ஆண்டுகளாக மறுவாழ்வு முகாம்களில் வாழும் மக்களும் தந்தை, மகன் மற்றும் பேரன் என்று வாழும் வாழ்க்கை முறை அமைந்து விட்டது.
இந்த நிகழ்வு, நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் எண்ண ஓட்டங்களையும், அனுபவ வாழ்வையும், இந்த சமூகத்தின் முன் பகிர்ந்துகொள்வதற்கும், கோரிக்கைகளாக முன் வைப்பதற்கும் ஒரு தளமாக விளங்கியது என்றால் அது மிகை இல்லை. அகதிகள் ஒவ்வொருவரும் தாங்கள் சந்தித்த சோதனைகளையும், அடைந்த இழப்புகளையும், பெற்ற வேதனைகளையும் பார்த்தால், அது வாழ்க்கையின் அவலம் என்பது புரியும். அதை மிக நேர்த்தியாக இந்த நிகழ்வின் மூலம் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தி இருந்தார்கள்.
இந்த படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் நமது வாழ்கையின் அனுபவங்களைக் காட்டும் விளக்குகள்தான். ஆனால், அந்த விளக்குகளின் வழி காண்கிற காட்சிகள் அதைவிட முக்கியமானவை. அவற்றின் மூலம் இந்த சமூகத்தின் முன் நாம் எழுப்புகிற கேள்விகள் மிகப் பெரியவை.
நோக்கம் நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. அதை நோக்கிய பயணமும் பாதையும் சரியானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது வெற்றியடையும் என்பார்கள். அதன்படி 'மாற்றம் சாத்தியமான ஒன்றுதான்' என்ற நம்பிக்கையோடு தொடங்கிய இந்தப் பயணம் இன்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
‘மாற்றத்தை விரும்பி வேண்டினால் மட்டும் போதாது; காண விரும்பும் மாற்றமாய் நாம் மாற வேண்டும்' என்பது காந்தியடிகளின் நல்லுரை. அதேபோன்று, நாம் அடைய விரும்பும் மாற்றமாய் அமைந்து இருந்தது ஒவ்வொருவரின் படைப்புகளும் என இவ்வாறு தெரிவித்துள்ளார் திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் டேவிட் அனோஜன்.

வாஸ் கூஞ்ஞ