
posted 4th April 2022
கிளிநொச்சி நகரத்தில் பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், டிப்பர் வாகன சாரதிகளுக்கு, ஞாயிற்றுக் கிழமை (03) மண்ணெண்ணெய் வழங்கியதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பங்கீட்டு அட்டைக்கான மண்ணெண்ணெயை வழங்காது, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் வாகன சாரதிகளுக்கு வழங்கப்பட்டது.
இதனால், அங்கு கூடிய பொதுமக்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அத்தியாவசிய சேவைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மாவட்ட செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், உடனடித் தேவைகளுக்காக பங்கீட்டு அடிப்படையில் பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கும் படி அறிவிக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதும், எரிபொருள் நிலையங்களில் அவ்வாறு வழங்காது, டிப்பர் வாகன சாரதிகளுக்கு பெரும் தொகையில் எரிபொருளை வழங்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அத்துடன், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் டிப்பர் வாகனங்களுக்கே மண்ணெண்ணெய் மற்றும் டீசல் அதிகளவு வழங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய