'காவிய நாயகன்'  திருப்பாடு களின் நாடகம் இன்று

யாழ்ப்பாணம் .... திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் பிரமாண்டமான அரங்க ஆற்றுகையான 'காவிய நாயகன்' திருப்பாடு களின் நாடகம் இன்று 7 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்ப மானது தொடர்ந்து 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு இவ்வாற்றுகை இடம்பெறவுள்ளது.

இல.238, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்படவுள்ள 'காவிய நாயகன்' நாடகம் வியாழன், சனி, ஞாயிறு தினங்களில் மாலை 6.45 மணிக்கும், வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கும் ஆரம்பமாகும்.

ஆண்டு தோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் திருமறைக் கலாமன்றத்தால் மேடையேற்றப்படும் இவ்வாற்றுகை கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மேடையேற்றப்படவில்லை என்பதுடன் கடந்த ஆண்டு 'களங்கம்' என்னும் பெயரில் சிறிய அளவில் மேடையேற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு வழமை போல் பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, ஒலி, ஓளிபோன்றவற்றுடன் அரங்கிலும் அரங்கப் பின்னணியிலும் நூற்றுக்கும் அதிகமான கலைஞர்கள் இவ்வாற்றுகையில் பங்கேற்கின்றார்கள். திரு மறைக்கலாமன்றம் தனது அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் படைப்பாக தயாரித்தளிக்கும் இவ்வாற்றுகையை ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின் றார்கள்.

திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அமரர் நீ. மரியசேவியர் அடிகளாரால் 2001ஆம் ஆண்டில் முதன் முதலாக எழுதப்பட்ட 'காவிய நாயகன்' திருப்பாடுகளின் நாடகம், 'மனிதம்' என்ற தேடலுக்கு பதில் தரும் வகையில் அமைந்துள்ள இயேசுவின் வாழ்வில் அவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், கட்டத்தையும், சவாலையும் எவ்வாறு அணுகி மனிதத்தின் உச்சமாகவும், எடுத்துக்காட்டாகவும் விளங்கினார் என்பதைக் கூறமுனைகின்றது. 'காவிய நாயகன்' இதற்கு முன்னதாக 2001, 2004, 2008, 2013ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

'காவிய நாயகன்'  திருப்பாடு களின் நாடகம் இன்று

எஸ் தில்லைநாதன்