காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஓர் திறந்த மடல் - சிவகரன்

தமிழர்களின் நீதி பூர்வமான வாழ்வியல் சுய இருப்பின் சமாந்திர சமத்துவ இருப்பை ஏற்றுணர்ந்து இந்த தேசத்தில் உரிமையுள்ள நீண்ட வரலாற்று பாரம்பரியமுள்ள இனக்குழுமமாக தமிழர்களை ஏற்று சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவரை இந்த தேசத்தை அறம் நின்று கொல்லும் என்பதை நீங்கள் இப்போதே உணர்வீர்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை என தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்பொழுது அரசுக்கு எதிராக நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம், குறிப்பாக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடர்பாக தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஓர் திறந்த மடல் என விடுத்திருக்கும் அறிக்கையில்;

தங்களின் சனநாயகப் போராட்டம் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தன்னெழுச்சியாக நடப்பதையிட்டு நாமும் மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில், சனநாயகப் போராட்டம், ஆயுதப்போராட்டம் என கடந்த எழுபது ஆண்டுகளாக எதிர்கொண்டவர்கள் என்ற வகையில் நீங்கள் நடாத்துவது வாழ்தலுக்கான போராட்டம். நாம் நடத்தியது வாழ்வுரிமை இருப்பிற்கான போராட்டம் இரண்டிற்குமிடையில் பாரிய வேறுபாடு உண்டு.

தமிழ்மக்கள் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறுவிதமான அடக்குமுறைகளுக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். எமது தமிழினம் மீது கட்டகட்டமாக நான்கு ஆண்டுகளில் இனக்கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவை, 1956, 1958, 1977,1983ஆம் ஆண்டுகளில், ஈழப்போர்களாகளாக வெடித்தன. எமது தமிழினம் அனுபவித்த கொடூரமான வாதைகள், கொலைகள், உயிரிழப்புகள், உடமை அழிப்புகள், புறக்கணிப்புகள், கணக்கிட்டு எண்ண முடியாத, வார்த்தைகளால் எடுத்தியம்ப முடியாத துயரத்தை எதிர் கொண்டது. இவற்றின் பிரதிபலிப்புதான், அதாவது, சமத்துவமான வாழ்வியல் உரிமை மறுக்கப்பட்டதன் விளைவே வன்முறையாக தோற்றம் பெற்றுள்ளது.

சிங்களவர்கள், தமிழர்களை எதிரிகளாகவும், விரோதிகளாகவும் நோக்க வைக்கப்பட்டனர். தமிழர்கள் சிங்கள இனம் வாழும் பகுதியினை அயல் நாடாக உணர்ந்தனர். உண்மையும், நீதியும், சத்தியமும், அறவுணர்வும் தமிழர்களின் கோரிக்கையில் இருந்த போதும், சிங்கள ஆதிக்கம் அவற்றை முழுமையாக புறக்கணித்தது.

எம்மை அடிமைகளாக, இரண்டாந்தர மனிதர்களாக நடத்தியதன் விளைவே ஆதிக்க எதிர்ப்பின் குறியீடாக தலைவர் பிரபாகரன் தோற்றம் பெற்று, யுத்தம் உருவெடுத்தது. அழகிய தேசம் உருகுலைந்தது. பொருளாதரமின்மையிலும் சிக்குண்டு சின்னாபின்னமாக சிதைவுற்றது.

ஆனாலும், நாம் மகிழ்ச்சியடையவில்லை. நிலப்பறிப்பு குடிப்பரம்பல் மாற்றம் மொழிச்சிதைப்பு, பண்பாட்டுச்சிதைப்பு, பொருளாதார அழிப்பு உயிரிழப்பு தனிச்சிங்களசட்டம் இதுமட்டுமா பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், சந்திரிக்கா பிரபாகரன் ஒப்பந்தம், ரணில் பிரபாகரன் ஒப்பந்தம் என பலவற்றால் ஏமாற்றப்பட்டுள்ளோம் 'இறப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல' என்பதே தமிழர்கள் மனோநிலை.

ஆகவே இந்த சனநாயகப் போராட்டத்தை நடாத்துவது யார்? உங்கள் அடிப்படைக் கொள்கை என்ன? 225 பேரும் வேண்டாம் என்றால் நீங்கள் கோரும் இடைக்கால அரசை நடத்துவது யார்? ஆட்சி மாற்றத்தாலோ அல்லது சனாதிபதி மாற்றத்தாலோ தற்போதைய பிரச்சினை தீர்ந்து விடுமா? உங்களிடம் என்ன திட்டமிருக்கிறது? உங்களை பின்னுக்கு இருந்து இயக்குவது யார்? அரச சார்பற்ற நிறுவனங்களா? அல்லது பன்னாட்டு தூதரகங்களா? அல்லது சிங்கள பெருவர்த்தகர்களா? இதுவரை இந்தப் போராட்டத்தின் தலைமை யாரென வெளிப்படையாக உணர முடியவில்லை 'புரட்சி என்பது மாலை நேரத்து விருந்தல்ல' என்றார் மாவோ.

ஆகவே இந்தப் போராட்டத்தில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று சிங்கள கலைஞர்கள் அழைத்துள்ளனர். நல்லது வரவேற்கின்றோம். ஆனால் நாம் ஏன் வரவேண்டும்? எதற்காக வரவேண்டும்? உங்கள் போராட்டத்திற்கும், எமக்கும் என்ன சம்பந்தம் உண்டு. இதற்கு வருவதால் தமிழர்களுக்கு என்ன நன்மை பயக்கும்?

போராட்ட இடத்தில் தமிழில் தேசிய கீதத்தை பாட முடியவில்லையே! இனி இழப்பதற்கு ஏதுமற்ற ஏதிலியாய் உள்ள நாம் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்தவற்றில் சிறு பாகத்தைத்தான் நீங்கள் இப்போது எதிர்கொள்கிறீர்கள்.

முதல் முறையாக எதிர் கொள்வது என்பது கடினம்தான். அதை நாமும் உணர்ந்து கொள்கின்றோம். எம்மை தமிழனாக அல்ல, மனிதனாக கூட நீங்கள் நினைக்கவில்லையே! மனிதபிமானத்திற்கு கூட பயங்கரவாத முத்திரை பதித்து பொருளாதார தடை விதித்து எம்மை நசுக்குவதில் கூட்டாக இன்பம் நுகர்ந்தவர்கள் நீங்கள். எமது நிலைமயை புரிந்துகொண்ட ஒரு சில சிங்கள முற்போக்காளர்களும் உள்ளனர் என்பதையும் நாம் புரிந்து கொள்கின்றோம்.

குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என எந்தவிதமான பாகுபாடும் இன்றி கொலை, கைது, கடத்தல், என வகை தொகையின்றி உங்கள் வஞ்சத்தை தீர்த்துக் கட்டினீர்களே! 2009 இறுதி யுத்தத்தில் 146,679 பேரை இனப்படுகொலை செய்தீர்களே! உணவு, மருந்து உறைவிடம் இல்லாமல் கொத்துக் குண்டுகளும், பொஸ்பரஸ் குண்டுகளும் வீசி எம்மை அழித்தீர்களே! பல ஆயிரம் பேரை காணாமல் போகச் செய்தீர்களே! உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை இன்றுவரை காணவில்லையே!

ஒரு இனத்தை அழித்துவிட்டு, அவர்கள் தெருவில் நின்று ஓலமிடும் போது நீங்கள் பட்டாசு கொழுத்தி பால்சோறு உண்டு மகிழ்ந்தீர்களே! இதுதானா பௌத்தத்தின் பஞ்சசீல தம்பதக் கோட்பாடு 'ஊழிற் பெருவலி யாவுழ மற்றொன்று சூழினும் தான் முந்துறும்' என்றார் வள்ளுவன்.

இப்போது அறம் உங்களை விரட்டுகிறது. கல்வி அறிவுடைய முற்போக்கு சிங்களவர்கள் கூட தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லையே. பௌத்த மகாசங்கங்கள் கல்வியியலாளர்கள் கூட வகுப்புவாத இனவாதத்தையே முன்னிலைப்படுத்துகிறீர்கள். சமஸ்டியை தமிழீழம் என்று சாதாரண சிங்கள மக்களுக்கு இனவாதத்தை ஊட்டுகிறீர்கள்.

சிங்கள இனவாத ஊடகங்களும், அரசியல் வாதிகளும் சொல்வதையே தாரக மந்திரமாக ஏற்றுக் கொள்கிறீர்கள். யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை எத்தனை சனநாயகப் போராட்டங்கள் நடத்தி விட்டோம். அவையெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது எமது கோரிக்கைதான் நியாயமில்லையா? இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் தமிழர்களை ஒரு கனம் நினைத்துப் பார்த்தீர்களா? தமிழரின் பூர்வீக மரபுவழி தாயக நிலத்தை அபகரித்து புதிய வரலாறு உருவாக்குவது எல்லாம் உங்கள் பார்வையில் சரிதானா?

பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகால தடைச்சட்டம் இரண்டையும் வைத்து எவ்வளவு நசுக்குகிறீர்கள். நீங்கள் போராடினால் சனநாயக உரிமை; அதற்கு பொலிசாரும், இராணுவத்தினரும், நீதிமன்றமும் எவ்வாறு நடந்துகொள்கிறது? நாங்கள் போராடினால் அது பயங்கரவாதம். ஒரு சிவில் செயற்பாட்டாளனாகிய நானே கடந்த பத்து ஆண்டுகளில் சிறை, பொலிஸ் நிலையம், நீதிமன்றம் 23 தடவைகள் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை இவ்வாறு என்னைப்போல் பலர் உண்டு.

இது எல்லாம் உங்களுக்கு புரியாது! இப்படி இருக்கையில் நாம் எப்படி இலங்கையராய் சிந்திக்க முடியும்? இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு என்பதையாவது புரிந்து கொண்டீர்களா? குறைந்த பட்சம் மனிதவுரிமை மீறப்பட்டுள்ளது என்பதையாவது ஏற்றுக்கொள்வீர்களா? இனியாவது உணரமாட்டீர்களா?

எதுமே இல்லாமல் வெறுமனே ஆட்சிமாற்றத்திற்கு, குடும்ப ஆட்சியை அகற்றுவதற்கு எம்மோடு கை கொடுங்கள் என்பது எந்த வகையில் நீதியானது? யுத்த வெற்றி நாயகர்கள் என மகுடம் சூடி பௌத்த தேசியவாத மேட்டிமைத்தனத்துடன் ஏகோபித்து வாக்களிக்கும் போது உங்கள் பகுத்தறிவு எங்கே போனது?

தமிழ்மக்கள் இராஜபக்சக்களுக்கு ஒரு போதும் வாக்களிக்கவில்லை. (2005, 2010, 2015, 2019 சனாதிபதி தேர்தலிலும்) 2009ல் தமிழினத்தை அழித்த போது உங்களை மெருகூட்டிய சிங்கக் கொடியுடனே இன்றும் நீங்கள் காலிமுகத்திடலில் நிற்கிறீர்கள். எங்களுக்கு அதைப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இந்த இலட்சணத்தில் நாம் எப்படி உங்களுடன் கை கோர்த்துக் கொள்வது? சிந்தித்துப் பாருங்கள்.

தமிழர்களின் நீதி பூர்வமான வாழ்வியல் சுய இருப்பின் சமாந்திர சமத்துவ இருப்பை ஏற்றுணர்ந்து இந்த தேசத்தில் உரிமையுள்ள நீண்ட வரலாற்று பாரம்பரியமுள்ள இனக்குழுமமாக தமிழர்களை ஏற்று சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவரை இந்த தேசத்தை அறம் நின்று கொல்லும் என்பதை நீங்கள் இப்போதே உணர்வீர்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஓர் திறந்த மடல் - சிவகரன்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now







ENJOY YOUR HOLIDAY