
posted 30th April 2022
புனித நோன்பு பெருநாள் பண்டிகை அண்மித்து வரும் நிலையில், பெருநாள் பண்டிகை வியாபாரங்கள் முஸ்லிம் பிரதேசங்களில் களைகட்டியுள்ளது.
விலைவாசி உயர்வுக்கு மத்தியிலும் பெருநாளை இம்முறை வழமைபோல் கொண்டாடுவதற்கு முஸ்லிம் மக்கள் தயாராகி வருகின்றனர்.
குறிப்பாக கிழக்கிலங்கையில் பெரும்போக நெல் அறுவடை முடிவடைந்த கால கட்டத்தில், நெல்விலை உயர்வுக்கு மத்தியிலும் நோன்புப் பெருநாள் வருவதால் அத்தகைய விவசாயிகள் மத்தியில் ஓரளவேனும் பணப்புழக்கம் காணப்படுகின்றது.
எனினும் எரிவாயு தட்டுப்பாடு, விலை உயர்வு போன்ற பல்வேறு பிச்சினைகளால் தேனீர்க்கடைகள், உணவகங்கள் மற்றும் தொழில் துறைகள் மூடப்பட்டு தொழிலையும், அன்றாட வருமானத்தையும் இழந்து தவிக்கும் சாதாரண மக்கள் புத்தாடைகளை வாங்கி அணிந்து பெருநாளைக்கொண்டாடக்கூட வசதியற்ற நிலை கவலைக்குரியது.
இந்த நிலையிலும் நோன்புப் பெருநாள் வியாபாரத்திற்காக வெளிமாவட்டங்களைச் சேர்ந்த புடவை மற்றும் உடுதுணி அங்காடி வியாபாரிகள் கிழக்கிலங்கையின் முஸ்லிம் பிரதேசங்களுக்குப் படையெடுத்த வண்ணமுள்ளனர்.
கிழக்கின் பிரதான வீதிகளில் மட்டுமன்றி முஸ்லிம் பிரதேசங்களின் உள்ளுர்ப்பகுதிகளிலும், தற்காலிக கொட்டில்களை அமைத்து இத்தகைய அங்காடி வியாபாரிகள் பகலில் மட்டுமன்றி, இரவு வேளைகளிலும் கூடத்தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக தைத்த ஆடைகளை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டிவருவதை அவதானிக்க முடிவதுடன், ஜவுளிக்கடைகளிலும் பொது மக்கள் நிறைந்து உடுதுணிகளை வாங்குவதையும் காண முடிகின்றது.
எதிர்வரும் மே மூன்றாம் திகதி இலங்கையில் (பிறை தென்படுவதை அவதானித்து) நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.
கடந்த வருடம் நாட்டில் நிலவிய கொவிட் பரவல் காரணமாக நோன்புப் பெருநாள் தொழுகைக்கு கட்டுப்பாடுகளும், தடைகளும் இருந்த போதிலும், இம்முறை வழமை போன்று பள்ளிவாசல்களிலும், பொது மைதானங்களிலும் நோன்புப் பெருநாள் தொழுகைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY