கறுப்புச் சந்தை வியாபாரிகளுக்குத் துணைபோகும் எரிபொருள் விற்பனை நிலையங்கள்

இலங்கைத் திரு நாட்டின் இன்றைய நிலமையால், எரிபொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் பெரும் கிராக்கி காரணமாக எரிபொருட்களான பெற்றோல், டீசல், மண்ணெண்ணை என்பவற்றை பதுக்கி வைத்து கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வோர் அதிகரித்துள்ளனர்.

இவ்வாறு எரிபொருட்களை நிரப்பு நிலையங்களில் பெற்று பதுக்கி வைத்து கூடிய விலைக்கு விற்பனை செய்து கொள்ளை இலாப மீட்டுவோர் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன்,

இவ்வாறு பதுக்கிவைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து கொள்ளை இலாப மீட்டுவோரைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இவ்வாறு எரிபொருட்களைக் கூடிய விலையில் கறுப்பச்சந்தை வியாபாரம் செய்வோரைப் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்புகள் மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டுவரும் நிலையில்,

இத்தகைய கொள்ளை இலாபமீட்டும் பதுக்கல் பேர்வழிகள் தொடர்பான தகவல்களைப் பொது மக்கள் தந்துதவ வேண்டுமெனப் பொலிஸார் கோரியுள்ளனர்.

மேலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் எரிபொருளுக்காகத்தினமும் நீண்ட கியூவரிசைகளில் பொது மக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலையும் இன்னும் ஓய்ந்தபாடாக இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உழவு இயந்திரங்களுக்கான டீசல் பற்றாக்குறை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கென நெற்காணிகளைப் பண்படுத்தும் ஆரம்ப உழவு வேலைகள் பாதிப்புற்றுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் சிறுபோக நெற் செய்கையைப் பூர்த்தி செய்வதற்கான விதைப்பு வேலைகள் தாமதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கறுப்புச் சந்தை வியாபாரிகளுக்குத் துணைபோகும் எரிபொருள் விற்பனை நிலையங்கள்

ஏ.எல்.எம்.சலீம்