கடல் மீன்பிடி ஆரம்பம்

கிழக்கிலங்கையில் கடல் மீன்பிடிக்குப் பெயர் பெற்ற கல்முனைப் பிராந்தியத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் தற்சமயம் கடல் மீன்பிடி ஆரம்பமாகியுள்ளது.

அண்மைக்காலமாகப் பெரும் மந்த நிலையிலேயே கடல் மீன்பிடித்தொழில் இருந்துவந்தமையால், கடற்றொழிலையே நம்பியிருக்கும் கடற்றொழிலாளர்கள், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக, தொழிலில் ஈட்டிவந்த வருமானமிழந்து வீடுகளிலேயே முடங்கிருக்க வேண்டிய அவலநிலமை நீடித்துவந்தது.

கரைவலை மீன்படித்தொழில் குறிப்பாக கல்முனைப் பிராந்தியத்தில், மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, பொத்துவில் முதலான பிரதேசங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

எனினும், ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதால், மீன்வளம் குன்றி பாதிப்புகள் ஏற்பட்டிருந்த போதிலும், கரைவலை மீன்பிடித் தொழில் மூலம் ஓரளவேனும் அன்றாட வருமானத்தைக் கடற்றொழிலாளர்கள் பெற்றுவந்தனர்.

இந்நிலையில், மந்த நிலையிலிருந்து வந்த கரைவலை மீன்பிடி மீண்டும் ஆரம்பமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதனால், தற்பொழுது கடற்றொழிலாளர்கள் கரைவலை மீன்பிடித்தொழிலில் ஆர்வத்துடன் மீண்டும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

அண்மைக்காலம் வரை வெறிச் சோடிக்காணப்பட்ட கடற்கரைப் பிரதேசங்களில் தற்போதய மீன்பிடி பருவகாலம் ஆரம்பமாகியுள்ளதால், கடற்றொழிலாளர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன், பெருமளவு தொழிலாளர்கள், கரைவலை மீன்பிடித்தொழிலாளர்கள் கரைவலை மீன்பிடித்தொழிலிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும், தற்சமயம் கீரி, பாரை இன மீன்கள் கரைவலைக்கு பிடிபடத் தொடங்கியுள்ளதால் மீன் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள், மற்றும் மரக்கறி வகைகளின் விலைகள் எகிறிவரும் நிலையில், அன்றாடத் தேவையான மீன்விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மக்களுக்கு ஓரளவேனும் ஆறுதலாக அமைந்துள்ளது.

கடல் மீன்பிடி ஆரம்பம்

ஏ.எல்.எம்.சலீம்