
posted 28th April 2022
இலங்கையில் ஏற்பட்ட எரிபொருட்களுக்கான பற்றாக்குறை காரணமாகக் கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட மக்களின் நீண்ட கியூவரிசைகள் தற்பொழுது ஓய்ந்துள்ளன.
அண்மைய சில தினங்கள் வரை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மிக நீண்ட கியூ வரிசைகளில் மக்கள் காத்துநின்றதையும், வாகனங்களும் எரிபொருள் நிரப்புவதற்காக பெருமளவில் நின்றன.
இந்த நீண்ட கியூ வரிசையும் எப்போதுதான் தணியுமோ என பலரும் அங்காலாய்த்த வண்ணமிருந்த நிலையில், கடந்த இரு தினங்களாக இந்த கியூ வரிசையுகம் முற்றுப்பெற்றுள்ளது.
பெற்றோல், டீஸல் விநியோகிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெறிச்சோடிக்காணப்படுவதுடன், சில நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே காணப்படுகின்றனர்.
மேலும் நாட்டின் வங்குரோத்து நிலைமை காரணமாக எரிபொருட்களை பதுக்கி வைத்து கூடிய இலாபமீட்டலாமென எதிர்பார்த்திருந்த பதுக்கல் பேர்வழிகள் இன்றைய தாராள எரிபொருள் இருப்பதால் பெரும் திண்டாட்ட நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் அறிய வருகின்றது”
கிழக்கில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எத்தகைய கியூவரிசையிலும் காத்திராது உடனுக்குடன் எரிபொருள் பெறத்தக்க புதிய யுகம் மலர்ந்துள்ளது.
எனினும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த சுமுக நிலை என்ற கேள்வியும் எழாமலில்லை.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)