
posted 18th April 2022
இலங்கையில் புதிதாக இடம்பெற்றுள்ள அமைச்சரவை நியமனத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அமைச்சு பதவி ஒன்றைப் பெற்றுக் கொண்டுள்ளமை முஸ்லிம் அரசியல் வட்டாரங்களில் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிரான ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று (திங்கள்) ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 17 அமைச்சர்களில், சுற்றுச்சூழல் அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார்.
ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டபோது அரசுக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம்காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரில் ஹாபிஸ் நஸீரும் ஒருவராவார்.
இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அகமட் மீண்டும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளமை பெரும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளதுடன், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்த்தர்கள் மற்றும் கட்சிப் போராளிகள் மத்தியில் பெரும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
“முழுநாடும் ஆட்சியாளர்களை வீட்டுக் அனுப்புவதற்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், கட்சியின் (முஸ்லிம் காங்கிரஸ்) கட்டுப்பாட்டை மீண்டும் ஒரு தடைவ மீறிக் கொண்டு அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்ட ஹாபிஸ் நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச்சின்னமாக மாற்றிக் கொண்டுள்ளார்”
என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு வாக்களித்து கட்சி கட்டுப்பாட்டை மீறியமைக்காக ஹாபிஸ் நஸீர் அகமட் உட்பட 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியில் வகித்த பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டமை மிகவும் அசிங்கமானது எனவும் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடம் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோக பூர்வமாகக் கூடி ஹாபிஸ் நஸீர் அகமதுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமெனவும் அவர் தெரிவித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)