
posted 17th April 2022
இலங்கையில் எரிபொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைகாரணமாக இன்றும் (ஞாயிறு) பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட கியூ வரிசைகள் காணப்பட்டன.
மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் இந்த வரிசைகளில் பெற்றோல் நிரப்புவதற்கெனக் கூடுதலாகக் காணப்பட்டன.
சுமார்கால்மைல், அரைமைல் தூரம் வரையும் தொடராக இத்தகைய எரிபொருள் நிரப்புவதற்கான கியூ வரிசைகளை அவதானிக்க முடிந்தது.
அத்துடன் பெற்றோல் இல்லை, டீசல் இல்லை, மண்ணெண்ணை இல்லை என்ற அறிவித்தல்களுடன் அம்பாறை மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையிலும் காணப்பட்டன.
இதேவேளை கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களில் எரிபொருட்களை வீடுகள் மற்றும் கடைகளில் பதுக்கி வைத்திருப்போரை கண்டறிவதற்காக பொலிஸார் திடீர் சோதனைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழமை போன்று எமக்குத் தேவையான எரிபொருள் தங்களுக்கு கிடைப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக மக்களின் நீண்ட வரிசை காணப்படுகின்றது.
இதற்குக் காரணம் சிலர் எரிபொருளை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்து பதுக்கி வைத்திருப்பதாகவும், சிலர் அதிக விலைக்கு விற்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனைக் கண்டறிவதற்காக பொலிஸாரினால் திடீர் சோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எரிபொருள் பதுக்கி வைத்திருப்போர் சம்மந்தமாக பொதுமக்கள் தகவல் தருமாறு பொலிஸாரால் கேட்கப்பட்டுள்ளது.
இச்சோதனையின்போது, கைப்பற்றப்படும் எரிபொருள் அரச உடமையாக்கப்படுவதுடன் உரிய நபர்களுக்கு எதிராக பாவனையாளர் அதிகார சபையூடாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் பொலிஸ் அறிவித்துள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)