
posted 5th April 2022
மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு வரும் என்ற அச்சத்தில் குடும்பங்களின் உறுப்பினர்கள் நீண்ட வரிசையில் நின்று மண்ணெணெய் பெற்று சேகரிப்பதில் ஈடுபடுவதாலேயே ஏனையோர் அவதிப்படுகின்றனர். மன்னாருக்கு போதிய எரிபொருள் வருவதால் அன்றாடத் தேவைகளுக்கு மட்டும் எரிபொருள் பெறுவதில் ஆர்வம் காட்டும்படி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு அற்ற முறையில் மக்கள் மற்றும் அத்தியாவசிய தேவையானோர் எரிபொருள் பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் முகமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் விஷேட கூட்டம் திங்கள் கிழமை (04.04.2022) காலை இடம்பெற்றது.
இக் கூட்டத்தைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;
மன்னார் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான எரிபொருளை தங்கு தடையின்றி வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் முகமாக எரிபொருள் நிலையங்களின் சம்பந்தப்பட்டோர் மற்றும் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வோர் யாவரையும் அழைத்து இன்று (திங்கள் கிழமை 04.04.2022) இதற்கான கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தோம்.
இதன் அடிப்படையில் மன்னார் மாவட்ட மீனவர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகாத தன்மையில் மீன்பிடிகளுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு மீன்பிடிச் சங்கங்களின் ரீதியாக இதற்கான எரிபொருள் நிலையங்களை பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று அத்தியாவசிய தேவைகளாக விளங்கும் நீர் வழங்கல், பேக்கரிகள், போக்குவரத்து சேவைகள் போன்றவற்றுக்கும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவாவண்ணம் ஒழுங்ககள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வைத்தியசாலைகளைப் பொறுத்தமட்டில் எவ்வித தடங்கல்கள் இன்றி எரிபொருள் வழங்கப்பட்டு வைத்தியசாலை சேவைகள் நடைபெற்று வருகின்றன.
மன்னாரிலிருந்து கொழும்புக்கு தற்பொழுது ஒரேயொரு தனியார் போக்குவரத்து பஸ் சேவை மட்டும் இரவு வேளையில் சென்று வருகின்றது. ஆகவே, இப் போக்குவரத்து சேவை பாதிப்படையாதிருக்கும் முகமாக நாளாந்தம் 210 லீற்றர் இதற்கான எரிபொருள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்பொழுது எங்களது அவதானிப்பின்படி மக்கள் அநாவசியமான பயத்தின் நிமித்தம் எரிபொருளை குறிப்பாக மண்ணெண்ணையை குடும்பங்களிலுள்ள யாவரும் நீண்ட வரிசையிலிருந்து பெற்றுக் கொண்டு தங்கள் வீடுகளில் சேகரித்து வைப்பதற்கான நடைமுறையை கையாண்டு வருகின்றனர்.
நாங்கள் மக்களுக்கு தெரிவிப்பது, மக்கள் இதன் நிமித்தம் அச்சப்படத் தேவையில்லை அன்றாடம் தேவையான எரிபொருளை மட்டும் பெற்றுக்கொண்டு, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் ஏனையோரும் தங்கள் தேவைகளை திருப்தியான முறையில் நிவர்த்தி செய்ய ஏதுவாகும்.
வழமையை விட மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது அதிகமான எரிபொருள் கொணரப்படுவதாக எரிபொருள் நிலையங்களின் பொறுப்பாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ