
posted 6th April 2022

கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம். றகீப்
கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளர் கடமையேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
மாநகர சபைகள் கட்டளை சட்டம் 14 (3) இன் பிரகாரம் கல்முனை மாநகர சபையின் பிரதம நிர்வாக அதிகாரி என்ற ரீதியில் மாநகர முதல்வராகிய எனக்கு, கடமையில் இருந்து வந்த மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சாரின் இடமாற்றம் தொடர்பாகவோ அல்லது புதிய ஆணையாளர் நியமனம் பற்றியோ மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடமிருந்தோ அல்லது பிரதம செயலாளரிடமிருந்தோ அல்லது ஆளுநர் தரப்பிலிருந்தோ எவ்வித அறிவித்தலும் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை. அதேபோல், புதிய ஆணையாளராக நியமனம் பெற்றவரும் அது குறித்து எனக்கு அறிவிக்கவில்லை. அவ்வாறே கடமையில் இருந்த ஆணையாளர் தமக்கு இடமாற்றம் வந்திருப்பதாக தெரியப்படுத்தவுமில்லை.
இந்நிலையில், கடந்த 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை, நான் அலுவலகத்தில் இல்லாத வேளையில், திரு. சிவலிங்கம் அவர்கள் ஆணையாளராக கடமையேற்க வந்திருக்கிறார். அவருடன் மாநகர சபை உறுப்பினர் திரு. இராஜன் மற்றும் பௌத்த தேரர் உள்ளிட்ட மத குருக்களும் மாநகர சபைக்கு வருகை தந்துள்ளனர். அப்போது ஆணையாளரின் அலுவலக அறையை திறக்குமாறு திரு. இராஜன், எமது மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தரை பலவந்தப்படுத்தி, அச்சுறுத்தியதுடன் நிர்வாக செயற்பாடுகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தார்.
அது மாத்திரமல்லாமல், மாநகர சபையின் பிரதான நுழைவாயில் கதவுகளுக்கு அவர் பலாத்காரமாக பூட்டுப்போட்டு, மூடி வைத்து, மாநகர சபையின் அலுவலக செயற்பாடுகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். இதனால் நீண்ட நேரம் மாநகர சபையின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததுடன் அங்கு பரபரப்பான சூழ்நிலையும் பதற்றமும் ஏற்பட்டிருந்தது. பொலிஸாரின் வருகையையடுத்தே நுழைவாயில் கதவுகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. இவ்வாறான அடாவடி செயற்பாடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாகவே புதிய ஆணையாளரின் கடமையேற்பு நிகழ்வு தடைப்பட்டிருக்கிறது.
இவ்விவகாரம் பொலிஸ் முறைப்பாடுகளையடுத்து நீதிமன்றம் வரை சென்று, கடந்த திங்கள் (04), செவ்வாய் (05) இரு தினங்களும் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று, இரு தரப்பினரதும் சமர்ப்பணங்களை உள்வாங்கிய நீதவான், இவ்விடயம் தொடர்பில் இந்நீதிமன்றமானது எவ்வித கட்டளையையும் பிறப்பிக்கும் அதிகார வரம்புக்குட்பட்டதல்ல எனத் தெரிவித்து, வழக்கை முடிவுறுத்தியுள்ளார்.
உண்மையில், புதிய ஆணையாளர் தனது நியமனம் மற்றும் கடமையேற்பு குறித்து எனக்கு முறையாக அறிவித்து, கலந்துரையாடியிருப்பாராயின் இவ்வாறான சர்ச்சைகளை தவிர்த்திருக்க முடியும். இவ்விடயத்தில் வெளியாரை முன்னிறுத்தியதால், அது அரசியலாகவும் இனவாதமாகவும் மாற்றப்பட்டு, தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவித்திருக்கிறது.
விடயம் இவ்வாறிருக்க, இடமாற்றப்பட்ட ஆணையாளர் முஸ்லிம் என்பதாலும் புதிய ஆணையாளர் தமிழர் என்பதாலும் அவரை கடமையேற்க விடாமல் தடுக்கப்பட்டதாக மாநகர சபை உறுப்பினர் இராஜன் முகநூல்களில் இனவாத நச்சுக்கருத்துக்களை தெரிவித்துள்ளார். புதிய ஆணையாளர் கடமையேற்பு விடயத்தில், தான் மூக்கை நுழைத்து, சண்டித்தன அரசியல் செய்ய முனைந்ததாலேயே ஆணையாளர் கடமையேற்பு சர்ச்சையாக மாறியது என்பதை மூடி மறைப்பதற்காகவே இராஜன் இவ்வாறான இனவாதக் கருத்துக்களை பரப்பி வருகின்றார்.
கல்முனையில் எப்போதுமே இனவாதத்தை தூண்டி விடுகின்ற இவரது செயற்பாடுகள் குறித்து தமிழ் சமூகம், குறிப்பாக கல்முனை வாழ் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அன்பாய் வேண்டிக் கொள்கின்றேன்- என்று முதல்வர் றகீப் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய