
posted 5th April 2022
கல்வித்துறையில் தமிழ்-முஸ்லிம் உறவுப் பாலமாகத் தொழிற்பட்டவர் போராசிரியர் சந்திரசேகம். ஆசிரிய கல்வி மேம்பாட்டுத்துறையில் அவரின் பணி அளப்பரியதாகும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இலங்கையில் கல்வித்துறை சார்ந்த பேராசிரியர்கள் பலர் இருந்தும் ஆசிரிய வான்மை விருத்தியில் ஆசிரியர் சமூகத்துடன் நேரடியாகவும் நூல்கள் மூலமாகவும் தொடர்புள்ள ஒரு கல்வியிலாளராக பேராசிரியர் சந்திர சேகரம் செயற்பட்டார். கல்விமாணி, முதுகலை கல்வி மாணி , பட்டப்பின் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்வித்துறை என அனைத்திலும் தம் பங்களிப்பை நல்கினார்
கொழும்பு பல்கலைக் கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை உள்வாரியாக ஆரம்பித்துக் கொண்டு செல்வது பேராசிரியரின் பணி முக்கியமாக இருந்தது. இலங்கையின் முன்னணி தேசியப் பத்திரிகைகளில் வாழும்வரை எழுதிக் கொண்டிருந்த ஒரே பேராசிரியராக கல்விப் புலத்தால் என்றும் நினைவு கூரத்தக்கவராகவே அவர் செயற்பட்டார்
கல்வித் துறையில் தாம் சார்ந்த கருத்துக்களை காய்தல் உவத்தலின்றி முன்வைப்பதில் சந்திர சேகரம் அவர்களுக்கு தனி இடமுண்டு. பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வு முயற்சிகள் பலவற்றிலும் கல்வித்துறை சார்ந்த முற்போக்கான கருத்துக்களை முன்வைத்த பேராசிரியரின் கருத்துக்கள் கல்விக் கொள்கை மற்றும் பாட விரிவாக்க மாற்றங்களுக்கும் உந்துசக்தாயாக அமைந்துள்ளன
முஸ்லிம் கல்வியலாளர்கள் மற்றும் எழுத்துறை சார்ந்தவர்களுடன் மிக நெருக்கமான உறவு கொண்டு அவர்களை தட்டிக் கொடுப்பதில் முன்நின்ற பேராசிரியரின் மறைவு தமிழ் பேசும் கல்விப்புலத்திற்கு பேரிழப்பாகும் எனவும் அவ் அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய