இளம் குடும்பஸ்தர் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி மரணம்

நாய் கடி மற்றும் பூனையின் நகக் கீறலுக்கு உள்ளான குடும்பஸ்தர் ஒருவர் நீர் வெறுப்பு நோய்க்கு இலக்காகி மரணமானார்.

யாழ்ப்பாணம் கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனி சூசைநாதன் (வயது-35) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

இந்த விடயம் குறித்து மேலும் அறியவருவதாவது,

உயிரிழந்த நபர் மூன்று மாதங்களுக்கு முன்னர் தெரு நாயின் கடிக்கு இலக்கானார். ஆனால், அவர் விலங்கு விசர் நோய் தடுப்பூசியை பெறத் தவறியிருந்தார். இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன்னர் பூனையும் அவரை நகங்களால் கீறியுள்ளது. இதற்கும் அவர் தடுப்பூசியை பெறத் தவறிவிட்டார்.

இந்த நிலையில், பருத்தித்துறையில் அவரின் சகோதரி வீட்டில் தங்கியிருந்த அவருக்கு நேற்று இரவு திடீரென நடுக்கம் ஏற்பட்டது. இதனால், அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். அங்கிருந்து அவர் உடனடியாக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.

இதேசமயம், அண்மைக்காலத்தில் விலங்கு விசர்நோய் தடுப்பூசி பெறாதமையால் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்துள்ள இரண்டாவது மரணம் இதுவாகும். அராலியை சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இளம் குடும்பஸ்தர் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி மரணம்

எஸ் தில்லைநாதன்