இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை தொடருமாகில் பலர் அகதிகளாக புறப்பட காத்திருப்பதாக தெரிவிப்பு

மன்னாரில் பொருளின் விலை மலைபோல் உயர்ந்து செல்லுகின்றது. எரிபொருள் இன்றி மீன்பிடி தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. எங்கள் குடும்பத்தில் பட்டினி சாவை எதிர்நோக்குவதால் இந்திய தமிழ்நாட்டை நோக்கி புறப்பட்டு வந்தோம் என இலங்கையிலிருந்து அகதிகளாகச் சென்ற குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மன்னார் மாவட்டத்திலுள்ள முத்தரிப்பு கிராமத்திலிருந்து இரு பிள்ளைகள் உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று தலைமன்னார் பாக்குநீர் கடல் வழியாக வியாழக்கிழமை (07.04.2022) பிளாஸ்ரிக் படகு ஒன்றின் உதவியுடன் புறப்பட்டு இவர்கள் வெள்ளிக்கிழமை (08.04.2022) இந்தியாவின் தனுஷ்கோடிக்கு அருகாமையிலுள்ள கம்பிபாடு என்ற கடற்பரப்பு பகுதியில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

இக் குடும்பத்தில் அந்தோனி நிஷாந்த் பெர்னடோ, ரஞ்சிதா என்ற கணவனும், மனைவியும், ஜெனுஸ்ரீகா, ஆகாஷ் ஆகிய இரு பிள்ளைகளும் மரைன் போலீசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அன்றாட அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் நாள்தோறும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற இந்த நிலையில் நாங்கள் எங்கள் குடும்பத்தில் பசி பட்டினியை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாலேயே இலங்கையை விட்டு இங்கு வந்துள்ளோம் என மரைன் பொலிசாரிடம் இவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களை மண்டபம் முகாமில் வைப்பதற்கான நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே அன்மையில் 16 பேர் இலங்கையின் பொருளாதார கஷ்டத்தின் நிமித்தம் சட்டவிரோதமாக தலைமன்னார் பாக்குநீர் வழியாக அகதிகளாக சென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இப் பொருளாதாரப் பிரச்சனை தொடர்ந்து நிலவுமாகில், மேலும் பலர் அகதிகளாக வருவதற்கு காத்திருப்பதாகவும் இங்கிருந்து சென்ற அகதிகள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை தொடருமாகில் பலர் அகதிகளாக புறப்பட காத்திருப்பதாக தெரிவிப்பு

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய