
posted 18th April 2022
நாட்டில் எரிபொருள் விநியோகம் இன்று திங்கட் கிழமை வழமைக்குத் திரும்புமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தபோதிலும், இன்றும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் மிக நீண்ட கியூ வரிசைகளில் காத்து நின்றனர்.
கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் முக்கிய பிரதேசத்திங்களில் சில நிரப்பு நிலையங்களில் எரிபொருளான பெற்றோல் வழங்கப்பட்ட போதிலும் குறித்த நிரப்பு நிலையங்களை அண்மித்து மிக நீண்ட கியூ வரிசைகளே காணப்பட்டன.
இதேவேளை கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர் உட்பட மேலும் சில பிரதேசங்களில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்த போதிலும், பெற்றோல், டீசல் வரலாமென்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் திரண்டு நின்றதுடன், நீண்ட நேரத்தின் பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில் 1500 மெற்றிக்தொன் பெற்றோலை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 41 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் எரிபொருளை கப்பலிலிருந்து இறக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)