இந்தியப் படையினர் இலங்கைக்குள்ளா? - மறுக்கிறார் கமால் குணரத்ன

இந்தியப் படையினர் இலங்கைக்குள்ளா? - மறுக்கிறார் கமால் குணரத்ன

இந்தியப் படையினர் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமால் குணரத்ன மறுத்துள்ளார்.

கடந்த ஆண்டு மித்ர சக்தி இந்திய-இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியின்போது வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புகைப்படங்களை, இந்த தவறான செய்தியில் இணைத்து வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் நடைபெற்று வரும் இரு தரப்பு கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியக் குழுவினர் இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பல்வேறு நோக்கங்களுக்காக இதுபோன்ற தவறான தகவல்களால் பொதுமக்கள் அச்சமடையவேண்டாம் என்றும், நெறிமுறையான ஊடக அறிக்கையிடலில் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் திறன் இலங்கை ஆயுதப்படையினருக்கு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியப் படையினர் இலங்கைக்குள்ளா? - உண்மையில்லை என்று மறுக்கும் இந்தியத் தூதரகம்

இலங்கையில் இடம்பெறும் போராட்டங்கள் மற்றும் நெருக்கடி நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தியா தனது படை வீரர்களை அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்-
''இந்தியா தனது படைவீரர்களை இலங்கைக்கு அனுப்புவதாக சில இணைய ஊடகங்களில் வெளியாகும் அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை தூதரகம் கடுமையாக மறுக்கிறது. தூதரகம் இத்தகைய பொறுப்பற்ற அறிக்கையிடலைக் கண்டிப்பதோடு, இவ்வாறானவர்கள் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட இணையத்தள ஊடகமொன்றில், 'இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைக் கருத்திற் கொண்டு இந்தியா அதன் நட்பு நாடான இலங்கையைப் பாதுகாக்கும் நோக்கில் டெல்லி இந்திய விமானப்படைத்தளத்திலிருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.' என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய தூதரகம் அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியப் படையினர் இலங்கைக்குள்ளா? - மறுக்கிறார் கமால் குணரத்ன

எஸ் தில்லைநாதன்