அமைச்சராகும் முஸ்லீம் எம்பிகளை நினைக்கையில் எம் சமூகம் வெட்கித் தலைகுனியும் நம் சமூகம் - ஹூனைஸ் பாறூக்
அமைச்சராகும் முஸ்லீம் எம்பிகளை நினைக்கையில் எம் சமூகம் வெட்கித் தலைகுனியும் நம் சமூகம் - ஹூனைஸ் பாறூக்

ஹூனைஸ் பாறூக்

சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளாக சென்றுள்ளவர்கள் குறிப்பாக முஸ்லீம் இனத்தைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருப்பது முஸ்லீம் சமூகம் வெட்கி தலைகுணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் சிரேஷ்ட சட்டத்தரனியுமான ஹூனைஸ் பாறூக் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இன்று செவ்வாய் கிழமை (19.04.2022) காலை ஹூனைஸ் பாறூக் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது;

இன்று இந்த நாட்டில் அரசுக்கு எதிராக பலரும் அதாவது பாமர மக்கள், கல்விமான்கள், இளைஞர்கள் மற்றும் கலைஞர்கள் விளையாட்டு வீரர்கள் என பலரும் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதாவது, இந்த நாட்டின் ஜனாதிபதி, அமைச்சர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும். புதிய அரசு ஒன்று உருவாக வேண்டும் என்ற கோஷங்கள் இட்டவர்களாக யாவரும் காணப்படுகின்றனர்.

இதற்கு மேலாக கடந்த காலங்களில் இந்த அரசு மேற்கொண்ட தவறுகளை, பிழைகளை இந்த ஆட்சியை கொண்டுவந்த பெரும்பாலான மக்களே இந்த அரசை சுட்டிக்காட்டும் நிலை எற்பட்டுள்ளது.

இந்த அரசு மேற்கொண்ட அட்டூழியங்கள், அடாவடித்தனங்கள், செய்த முறைகேடுகளெல்லாம் ஒருங்கிணைந்து வந்த சாபக்கேடே இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது என இந்த ஆட்சியை கொண்டு வந்தவர்களே மேடை போட்டு சொல்லி வரும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நேரத்தில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளாக சென்றுள்ளவர்கள், குறிப்பாக முஸ்லீம் இனத்தைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருப்பது அவர்களது சமூகமான முஸ்லீம் சமூகத்தையே வெட்கி தலைகுணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முஸ்லீம் மக்களுக்கு இந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட தீமைகளை சற்று நேரம் இந்த முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிந்தித்திருப்பார்களென்றால், வெட்கம், றோசம் இருந்திருந்தால், இவர்கள் இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருந்திருக்க மாட்டார்கள்.

இதே அரசுதான் பள்ளிவாசலுக்குள் பன்றி இறைச்சியை வீசி எறிந்து, தொழுகைக்கு இடையூறு விளைவித்தார்கள். அது மட்டுமல்லாமல் கத்தோலிக்க தேவாலயங்களில் குண்டு வைத்து பல பக்தர்களைக் கொன்று குவித்துவிட்டு, அவர்களின் ஆட்சியை தக்கவைப்பதற்காகவும் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கும் சதி செய்ததும் இதே அரசுதான்.

இவ்வாறு கொடுமைகளையும், கொடூரங்களையும் சமூகங்களுக்கு இழைத்துவிட்டு, அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை கைது செய்து, இன்றுவரை தடுத்து வைத்துள்ளனர். இவ்வாறு சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் இவர்களில் யார் யார் முஸ்லீம்களுக்கு குரல் கொடுக்கின்றார்களோ அவர்களை அடையாளப்படுத்தி ஒடுக்குவதில் இந்த அரசு கவனம் செலுத்தியது.

இவற்றையெல்லாம் வெளிச்சம் போட்டுக்காட்டும் வகையில், இன்று பெரும்பான்மை இன மக்களே வீதிக்கு வந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

எமது வன்னி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், விவசாயமும், மீன்பிடியுமே பிரதான தொழிலாகும். ஆனால் விவசாயிகள் மட்டில் அரசின் பிழையான கொள்கை, எரிபொருள் விலையேற்றம் இவற்றால் இந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதைப் பார்க்கின்றோம்.

இதனால், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, மரண விளிம்பில் இருக்கும் மக்கள், இந்த ஆட்சி மாறி புதிய அரசு உருவாக வேண்டும் என்ற நிலையில் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில், வன்னி மாவட்டத்திலும் அரசுக்கு வாக்களித்த மக்களே இந்த அரசு மாறவேண்டும் என்ற நிலையில் இருக்கும்போது, முஸ்லீம் மக்களுக்கு அரசு இழைத்த தீமைகளை சுட்டிக்காட்டியபோதும், பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரு சில முஸ்லீம் பிரதிநிதிகள் மக்களின் குரலுக்கு செவிசாய்க்காது தங்கள் சொகுசு வாழ்க்கையை மட்டுமே கருத்தில் கொண்டு அதையே நாடிச் செல்வது வேதனைக்குரியதொன்றாகும்.

வன்னி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் காதர் மஸ்தான் அவர்களை 2015ஆம் ஆண்டு நானே அவரை அரசியலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாக அழைத்துச் சென்றேன்.

அன்றே இவர் எனக்கும் சதி செய்து பாராளுமன்றம் சென்றவர். இருந்தும் இன்று இவர் இவருக்கு வாக்களித்த மக்களின் உணர்வுகளை சிந்திக்காது, தங்கள் பதவிகளை தக்கவைப்பதிலே தனது கவனத்தை செலுத்தியுள்ளார். இதனால் நான் வெட்கி தலை குனிய வேண்டியவனாக இருக்கின்றேன்.

இன்று, இந்த அரசால், முஸ்லீம் மக்களுக்கு இழைத்த துன்பங்களை கவனத்தில் எடுக்காது, அமைச்சு பதவிகளை பெற்ற முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களை முஸ்லீம் சமூகம் ஒருபோதும் மன்னிக்காது என்றார்.

அமைச்சராகும் முஸ்லீம் எம்பிகளை நினைக்கையில் எம் சமூகம் வெட்கித் தலைகுனியும் நம் சமூகம் - ஹூனைஸ் பாறூக்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)