'அகதியாக பிறந்தது என் குற்றமல்ல; அகதியாக நான் மடிவது யார் குற்றம்?? - மாணவியின் உள்ளக் குமுறல்!

தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தவர்கள் குடியுரிமைக்காக காத்திருக்கும் இவ்வேளையில், விழிப்புணர்வை முன்னெடுத்து செல்வதில் ஆர்வம் காட்டிவரும் ஒரு அங்கமாக அங்குள்ள மாணவ சமூகம் கவிதை கட்டுரைகள் மூலம் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் திருவண்ணாமலை மாவட்டம் வேலப்பாடி முகாமில் வசிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவி டிலூஹா ஹெவின்ஷிகா என்பவர் படிப்பு, நடனம், விளையாட்டு என மும்பை வரை பாடசாலையின் மூலம் சென்று வந்துள்ளார்

சிறந்த மாணவியாக படித்துகொண்டு இருக்கும் இவரது கனவு ஒரு மருத்துவராகி ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய கனவோடு படித்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக இதய மருத்துவராக ஆவதே தனது இலட்சியம் என்று கல்வியை தொடர்ந்து வருகிறார். இவர் தனது கட்டுரையில் அவரது காய வடுக்களை பின்வருமாறு பதிவு செய்கிறார்.

'நான் மூன்றாம் வகுப்பு படித்துகொண்டு இருந்தபோது என் அம்மாவுடன் பதார்த்தம் வாங்க கடைக்கு சென்றேன். ஒரு சகோதரர் 'அகதி அக்கா' இங்க வாங்க காய் வாங்க' என்று அழைத்தார்.

நான் என் அம்மாவை நிமிர்ந்து பல கேள்விகளோடு புரியாமல் பார்த்தேன். சில வருடம் கழிந்தது. நான் பாடசாலை செல்லும் பேருந்து என் வீட்டின் முன்பு வந்து நின்றது.

நான் அங்கு இறங்க வேண்டும். ஓட்டுனர் அண்ணன் 'எங்கே அந்த அகதிப் பாப்பா' என்று சப்தமாக கூப்பிட்டுதான் என்னை கீழே இறக்கி விடுவார்.

என் அண்ணன் கல்லூரியில் படித்து வருகிறார். அவர்களையும் அங்கு 'அந்த இலங்கை பசங்க எங்கப்பா' என்றுதான் அழைப்பார்களாம். இந்தப் பிரிவு ஏன் என்று சிந்தித்தேன்.

இன்னும் அழுத்தமாகவே உள்ளேன்'' என்று பதிவு செய்யும் அவர், இடைப்பட்ட காலத்தில் இலங்கை சென்று மீண்டும் இங்கு திரும்பியுள்ள அவர் தான் அங்கு ஒரு அகதியாக அனுபவித்து உணர்ந்த அனுபவங்களையும் பதிவு செய்திருந்தார்.

'பிறக்கும்போது ஏழ்மையாக பிறப்பது உன் தவறல்ல. ஆனால்,
இறக்கும்போது ஏழ்மையாக இறப்பது உன் குற்றம் என்கிறார்’
பில்கேட்ஸ்

'அகதியாக பிறந்தது என் குற்றமல்ல; அகதியாக நான் மடிவது யார் குற்றம்?? என்ற கேள்வியையும் இந்த சமூகத்திடம் கேள்விகளாய் விட்டுச் செல்கிறார்.

'அகதியாக பிறந்தது என் குற்றமல்ல; அகதியாக நான் மடிவது யார் குற்றம்?? - மாணவியின் உள்ளக் குமுறல்!

வாஸ் கூஞ்ஞ