
posted 2nd April 2022
நாட்டு மக்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டு, அவர்களை நிம்மதியாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு உள்ளது. இந்த தார்மீக பொறுப்பிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் தப்பித்துக்கொள்ள முடியாதென மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியா சாளம்பைக்குளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“இந்த நாட்டில் வாழுகின்ற மக்கள் பசியாலும் பட்டினியாலும் பொருளாதார நெருக்கடிகளினாலும் இன்று வீதிக்கு இறங்கி போராடிக்கொண்டிருக்கின்றனர். “எம்மை வாழ விடுங்கள், எமது பிள்ளைகளை வாழ விடுங்கள்” என்ற கோஷமே எங்கு பார்த்தாலும் ஒலிக்கின்றது. மக்கள் உண்ண உணவின்றி, வாழ்வதற்கு வழியில்லாமல், வேதனையின் விளிம்பில் இருப்பதனாலேயே, நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றனர். அவ்வாறான மக்களின் மீது தங்களுடைய அதிகாரத்தை பிரயோகித்து, அடக்கி, அச்சுறுத்தி, சிறைப்படுத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.
இந்த ஆட்சியாளர்கள் ஆட்சிபீடத்தில் ஏறிய நாள் தொடக்கம், கடந்த இரு வருடங்களாக இனவாதத்தையும், மதவாதத்தையும் விதைத்து, இந்த நாட்டைக் குட்டிச்சுவராக்கிவிட்டனர். இன்று அவர்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களும் கூட அரசுக்கு எதிராக வீதியில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் அரசாங்கம் உடனடியாக தங்களுடைய பதவியிலிருந்து விலகி, நாட்டு மக்கள் விரும்புகின்ற, நாட்டுக்கு நல்லது செய்யக் கூடிய ஒரு ஆட்சியை உருவாக்குவதற்கு வழிவகுக்க வேண்டும். ஜனாதிபதியும் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் ஒன்றிணைந்து விட்டுக்கொடுப்பு செய்வதன் ஊடாக மட்டும்தான் ஒரு தீர்வைக் காண முடியும். இவர்களால் இந்த நாட்டை கொண்டு நடாத்த முடியாது என்பதை கடந்த இரு வருடங்களில் நிரூபித்துவிட்டனர். இவர்களால் இந்த நாடு தொடர்ந்தும் அதலபாதாளத்தில் வீழ்ந்துகொண்டிருக்கிறது.
எனவே, நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து, நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு, இன, மத பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு, மக்கள் விடுக்கின்ற கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House