
posted 30th April 2022
மே தினம் என்பது உலகத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த தினமாகும். இத்தினத்தை உலகத் தொழிலாளர்கள் தங்களுக்குரிய தினமாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம், ஈ.பி.ஆர்.எல்.எப்(ப.ம) விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த மே தினச் செய்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையைப் பொறுத்தவரையில் தொழிலாளர் வர்க்கங்களில் இன்னும் பலதேவைகளை இலங்கை அரசு பூர்த்தி செய்யவில்லை. தற்சமயம் உள்ள சூழ்நிலையில் ஒட்டு மொத்தமான தொழிலாளர்களான மீன்பிடி, விவசாயம், தினக்கூலி, சீவல் தொழிலாளர்கள், சிகை அலங்காரத் தொழிலாளர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தனியார் மற்றும் அரச, கூட்டுத்தாபனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், ஆட்டோ சாரதிகள், வாகன சாரதிகள், இத்தோடு ஏனைய தொழில் சார்ந்த தொழிலாளர்கள் அனைவரும் இலங்கை அரசின் பொருளாதார தவறான கொள்கை காரணமாக மொத்தத் தொழிலாளர்களும் மிகவும் பாதிப்படைந்து தங்களது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இத் தொழிற்துறை சார்ந்தோர் இலங்கை அரசின் பொருளாதார கொள்கை காரணமாக பணவீக்கம், பொருளாதாரச்சுமை, பொருட்களுக்கான விலையேற்றம், போன்றவற்றுக்கு முகம் கொடுத்து மே தினத்தைக் கூட கொண்டாட முடியாதளவிற்கு மனநிலை உள்ளவர்களாக இலங்கை அரசின் ஜனநாயக மறுப்பு, ஊழல்மோசடிஆட்சி, மனித உரிமை மீறல்கள் போன்ற செயற்பாடுகளால் எம் தொழிலாளர்கள் பாதிப்படைந்து ஒவ்வொரு தொழிலாளர்களையும் கடனாளியாக மாற்றி, தனக்கே உணவில்லாமல் இலங்கை அரசின் கடனைக்கட்டவேண்டிய நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டும், தொழிலாளர்களின் இயற்கை வளங்களை இல்லாமலாக்கி ஒரு சில முதலாளிகள் மட்டும் உழைக்கும் வர்க்கமாக மாற்றி அரசுக்கு கட்ட வேண்டிய கோடிக்கணக்கான வரிகளையும் தனிநபர்களே சுரண்டி ஏழைத் தொழிலாளர்களை பட்டினிச் சாவில் இந்த அரசு கொண்டு நிறுத்தி உள்ளது.
எனவே, இத் தொழிலாளர் தினத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில்,
மீனவர்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும். முன்பள்ளி ஆசிரியர்களை ஆசிரியர் திட்டத்தின் கீழ் உள்வாங்கி மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும்.
உள்ளூராட்சி சபைகளிலும், ஏனைய அரச, தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்கின்றவர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவதோடு, அவர்களின் தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். இயற்கை சூழலில் உள்ள கால்நடைகளை இயற்கை சூழலிலும், ஏனைய வியாபார நோக்கத்தோடு மட்டும் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கான சரியான திட்டங்களையும், மேய்ச்சல் தரைக் காணிகள், மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களின் குறைபாடுகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும்.
சலவைத்தொழில் செய்வோர்கள், சுகாதாரத்தொழில் செய்வோர்கள், சீவல் தொழில் செய்வோர்கள், சிகை அலங்காரத் தொழில் செய்வோர்கள், சிற்றூளியர்கள், மீன்பிடித் தொழிலாளிகள், தினக்கூலி வேலை செய்வோர்களின் வறுமையைப் போக்குவதற்கு அரசு உடனடியாக மானியத் திட்டத்தை அறிவிப்பதோடு, அவர்களின் நலன்கள் தொடர்பாகவும் அவர்கள் பெற்ற கடன்களை இரத்துச் செய்யவும் இவர்களுக்கான வீடு இல்லாத பிரச்சினை, காணி இல்லாத பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும்.
தனியார் துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றை உரிய காலத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல், விவசாயிகளினால் அறுவடை செய்யும் நெல்லை உரிய நேரத்திற்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதோடு, இவ் விவசாயிகளின் விவசாயம் செய்வதற்கான உரம் (யூரியா), கிருமிநாசினிகளை மானிய அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுத்தல்,வாகனச் சாரதிகள், ஆட்டோ சாரதிகளின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY