பரீட்சையில் சாதனை புரிந்து  இலங்கையில் இரண்டாவது இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு கல்வி வலயம்!
பரீட்சையில் சாதனை புரிந்து  இலங்கையில் இரண்டாவது இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு கல்வி வலயம்!

திருமதி சுஜாதா குலேந்திரகுமார்

மட்டக்களப்பு கல்வி வலயம் அண்மையில் வெளியாகிய தரம்- 5 புலமைத் தேர்வுப் பரீட்சையில் சித்தி வீதத்தில், இலங்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் குறிப்பிட்டதாவது;

2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்த நிலையில் அதன் அடிப்படையில் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அகில இலங்கை ரீதியிலான பகுப்பாய்வின்படி, மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சித்தி பெற்றதன் அடிப்படையில் இலங்கையில் உள்ள 100 கல்வி வலயங்களிலும் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து 2050 பிள்ளைகள் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்கள். இவர்களுள் 449 பிள்ளைகள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுச் சித்தி பெற்றிருக்கின்றார்கள். 2020 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியோரில் 433 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றதன் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் எமது கல்வி வலயம் ஐந்தாவது இடத்தைப் பெற்றிருந்தது.

அதேபோல், சித்தி பெறுதல் என்ற அடிப்படையில் எமது கல்வி வலயம் 26ஆவது இடத்தினைப் பெற்றுள்ளது. 2020 ஆம் ஆண்டு நாம் 57 ஆவது இடத்தினைப் பெற்றிருந்தோம். இதுவும் முன்னேற்றகரமான நிலையாகும்.

2020 மற்றும் 2021களில் நாட்டில் ஏற்பட்ட கொவிட் நிலைமை காரணமாக தரம் 4, 5 மாணவர்களின் வகுப்புக்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையிலும், ஏனைய வலய மாணவர்களை விட, எமது வலய மாணவர்கள் மிகவும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றிருக்கின்றார்கள். இதற்காகப் பாடுபட்ட எமது கல்வி வலயத்தின் அதிபர்கள், இடர்நிறைந்த காலத்திலும் இம்மாணவர்களை நேரடியாகவும், தொழில்நுட்பத்தின் ஊடாகவும் கற்பித்த ஆசிரியர்கள், குறிப்பாக எமது கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆரம்பக்கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அவருடன் இணைந்து செயற்பட்ட ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆகிய அனைவருக்கும் பாராட்டுக்களையும், நன்றிகளை யும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கை ஆசிரியர் சங்கம் மட்டக்களப்பு கல்வி வலயம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்காகவே பத்திரிகையாளர் சந்திப்புக்களை நடாத்துவதை அவதானித்திருக்கின்றேன். எந்தவிதமான புள்ளிவிபரங்களின்றியே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அவர்களால் முன்வைக்கப்படுகின்றது. குறித்த தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த(சாதாரணதரப்) பரீட்சைகளில் மிகவும் முன்னேற்றகரமான சித்திகள் கிடைக்கப்பெறுகின்றது. இருப்பினும் உயர்தரத்தில் சில பாடத்துறைகளில் கொவிட் நிலைமை காரணமாகப் பின்னடைவு ஏற்பட்டது. அதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்றிருக்கின்றது. 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர்தரப்) பெறுபேறுகள் நிட்சயமாக உயர்வாகவே காணப்படும்.

கொவிட் நிலைமைகளின் பின்னர் தற்போது ஒருவாறான சீரான நிலைமை வந்து கொண்டிருக்கின்றது. இதன்போது மாணவர்களுக்கு நாங்கள் பயிற்சிப் பரீட்சைகளை நடாத்தி வருகின்றோம். குறிப்பாக 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (சாதாரணதரப்) பரீட்சைகள் இன்னும் நடைபெறவில்லை. அப்பரீட்சையினை, எதிர்வரும் மே மாதம் நடாத்துவதற்கு இலங்கைப் பரீட்சைகள் திணைக்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்தப் பரீட்சைக்குச் செல்லும் மாணவர்களுக்காக மூன்று பயிற்சிப் பரீட்சைகளை நாங்கள் நடாத்துவதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம். அவ்வாறே ஒவ்வொரு தரங்களுக்கும் செயலட்டைகளை வழங்கியிருக்கின்றோம்.

அத்துடன் அதிபர்கள் தத்தமது பாடசாலைகள் ஊடாக அவர்கள் பூர்த்தி செய்திருக்கின்ற பாடவிதானத்தின் அடிப்படையில் பயிற்சி வினாக்களையும், செயலட்டைகளையும் மட்டக்களப்பு கல்வி வலயம் ஊடாகவும், மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் முக்கிய பாடங்கள் அடங்கிய குறிப்பேடுகளை அச்சடித்து மாகாணம் முழுவதும் வழங்கியிருக்கிறார். அது மாணவர்களுக்கு இவ்வாறான கொவிட் காலத்தில் துரித மீட்டலை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

இத்தகைய இடர்காலத்தில் மாணவர்களின் பெறுபேறுகளை உயர்த்துவதற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரும், வலயக் கல்விப் பணிப்பாளர்களும் மிகவும் அர்ப்ணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

பரீட்சையில் சாதனை புரிந்து  இலங்கையில் இரண்டாவது இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு கல்வி வலயம்!

ஏ.எல்.எம்.சலீம்

மாணவர்களுக்காக எழுதப்பட்ட இந்த Blog உள்ள பலவிதமான கட்டரைகளை வாசித்து பலன் பெறலாம்.

அத்துடன், அவர்களுக்குத் தேவையான Mind Map ஐயும் பதிவிறக்கம் செய்து அறிவை மேலும் வளப்படுத்திக் கொள்ளலாம்.



ஆன்லைன் மூலம் கல்வியைப் பெற கீழேயுள்ள இணைப்பை கிளிக் செய்யங்கள்>>> Target Teach Tutors