
posted 7th April 2022
இலங்கையின் தென்கிழக்கு பிரதேசத்தின் முக்கிய முஸ்லிம் பிரதேசமான நிந்தவூரில் அரசுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று நடைபெற்று முடிந்துள்ளது.
“நம்மை நாம் மீட்கும் மக்கள் பேராட்டம்” எனும் தலைப்பிலும், ஒன்றுபட்டு நாட்டை மீட்போம் எனும் தொனிப்பொருளுடனும், நிந்தவூர் பிரதேச இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இன்று புதன் இரவு ஏழு மணியளவில் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியப் பாடசாலை அருகில் ஒன்று திரண்ட இளைஞர்கள் அந்த இடத்திலேயே அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது பெருமளவு பொது மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இலங்கையில் நடைபெற்றுவரும் இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் முதன்மைக் கோஷமாக எழுப்பப்பட்டுவரும் “கோ ஹோம் கோட்டா” (புழ ர்ழஅந புழவய) வசனம் கொண்ட தலைப்பட்டிகளை அணிந்தவாறே ஆர்ப்பாட்டக்காரர்கள் காணப்பட்டதுடன், அதனையே அவர்கள் முக்கியகோஷமாகவும் எழுப்பினர்.
அதேவேளை இளைஞர் ஒருவர் முஸ்லிம் மக்கள் இன்றைய இனவாத அரசால் வஞ்சிக்கப்பட்டமை தொடர்பாகவும், அரசின் திட்டமிட்ட ஈஸ்டர் தாக்குதலையடுத்து முஸ்லிம் மக்கள் பட்டதுன்பதுயரங்களையும், வீண்பழி தொடர்பிலும் ஆர்ப்பாட்டத்தில் திரண்டிருந்தோர் மத்தியில் உரையாற்றினார்.
இதனைத்தொடரந்து நிந்தவூர் பிரதான வீதியூடாக, ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்று உள்ளுர் வீதிகளுடாகவும் சென்று ஆரம்பித்த இடத்தில் முடிவுற்றமை குறிப்பிட்டத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்