நாடோ குழப்பத்தில் - குடும்பமோ சுற்றுலாவில் - விபத்தினில் சிக்கி - வயோதிபர் மரணம்

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குச் சுற்றுலா சென்ற வான் கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் திருமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் கிளபென்பேர்க் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து கிண்ணியா நோக்கிப் பயணித்த கனரக வாகனமும் கிண்ணியா பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி யாழ்ப்பாணத்திலிருந்து சென்றுகொண்டிருந்த வாகனமுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ரத்னகலாவதி (வயது-72) என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குச் சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்த வயோதிபரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நாடோ குழப்பத்தில் - குடும்பமோ சுற்றுலாவில் - விபத்தினில் சிக்கி - வயோதிபர் மரணம்

எஸ் தில்லைநாதன்