தமிழ் அரசுக் கட்சியின் கல்முனை ஆர்ப்பாட்டத்தில்  ரவூப் ஹக்கீமும் இணைவு

கோட்டா அரசை கூண்டோடு வீட்டுக்கு அனுப்புவோம் எனும் கோசத்துடன் கல்முனை மாநகரில் இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என பெருந்தொகையானோர் கலந்துகொண்டதுடன் கல்முனை மாநகரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றையும் நடத்தினர்.

கல்முனை சமாதான சதுக்கத்திலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமும் கலந்து கொண்டார்.

பெருமளவிலான தமிழ், முஸ்லிம் மக்கள் இந்த அரசை வீட்டுக் அனுப்பக் கோரும் ஆர்ப்பாட்டப் போரணியில் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர்;

“வேண்டும் வேண்டும் கோட்டா அரசு வீடு செல்ல வேண்டும்”

“உணவும் வேண்டும் உரிமையும் வேண்டும்”

“பயிருக்குப் பசளை இல்லை பஸிலுக்கு மூளை இல்லை”

“காணமல் பேன உறவுகளின் சாபக்கேடு இந்த அரசை சபித்துள்ளது”

“ஒரே ஆட்சி முடிந்தது மக்கள் மூச்சு எழுந்தது”

போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் எழுப்பியதுடன் அரசை கண்டிக்கும் பல்வேறு சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றுகையில் இங்கு தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றினைந்திருப்பது இந்த ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை ஒழித்துக்கட்டுவதும் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கான நோக்கம் கொண்டதுமாகும் அதை மட்டுமே முக்கிய இலக்குடன் எமது போராட்டத்தினை தொடர்வோம் வேறு பிரச்சினைகள் இருப்பின் நாம் பேசித்தீர்த்துக்கொள்ளலாம் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்க “இரா சாணக்கியன் உரையாற்றுகையில் இந்த அராஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்திற்கு தமிழ் முஸ்லிம் மக்கள் முழு ஆதரவு தர வேண்டும் இந்த ஆட்சியை விட்டும் ராஜபக்ஷ குடும்பம் அகலும்போதுதான் மக்கள் நிம்மதி அடையமுடியும் என்றார்.

இவ்வாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த முக்கிய சமயத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூக் ஹக்கீமை நோக்கி திடீரென ஆர்ப்பாட்டத்தில் புகுந்த சிலர் கேள்விக் கணைகளை தொடுக்கத் தொடங்கினர்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அரசுக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலும் அமைச்சுப் பதவியை ஏற்ற ஹாபிஸ் நஸீர் தொடர்பிலும் அவர்கள் ஹக்கீமை நோக்கி எடுத்த நடவடிக்கை உருப்படியானதா என கேள்விகளை சத்தமிட்டு எழுப்பத் தொடங்கினர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவியேற்ற முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமன்றி ஏனையவர்கள் மீதும் கண்டிப்பான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியதுடன் அமைச்சுப் பதவியை ஏற்றவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வறிதாக்க வேண்டும் என்பதும் கட்சியின் நிலைப்பாடாகும் எனக் கூறினார்.

சிறு சலசலப்பு இதன் போது ஏற்பட்ட போதிலும் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைவர் ரவூக் ஹக்கீமை தம்முடன் இணைத்தவாறு ஆக்ரோஷத்துடன் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

தமிழ் அரசுக் கட்சியின் கல்முனை ஆர்ப்பாட்டத்தில்  ரவூப் ஹக்கீமும் இணைவு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)