
posted 2nd April 2022
நேர்காணல் : திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வார இறுதியில் கல்முனைக்கு வருகை தந்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமிடம் கேட்டவையும்,அவற்றிற்கு அவர் அளித்த பதில்களும்.
கேள்வி: சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் சென்ற போது நீங்களும் சென்றிருந்தீர்கள். யார் அழைப்பில் பேரில் அங்கு சென்றீர்கள்?
பதில்: அமீரகத்தில் வசிக்கும் எனது ஆருயிர் நண்பர்கள் சிலர், தமிழக முதல்வர் அவர்களை அங்கு வரவேற்பதையிட்டு என்னையும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்ற வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், முதல்வர் அவர்களின் வருகைக்கு கண்ணியம் செலுத்தும் வகையில் நானும் அங்கு சென்று கலந்து கொண்டேன். அமீரகத்தில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், பல்லாண்டு காலமாக அங்கு வணிகம் செய்து கொண்டிருக்கக் கூடிய தொழிலதிபர்கள், தனவந்தர்கள் என எல்லோரும் குடும்பத்தோடு கூடினர். ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியான அந்த நிகழ்ச்சியில் இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்களின் குரலாக நானும் அங்கு உரையாற்றியதை எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்குரிய அம்சமாக நான் கருதுகிறேன்.
கேள்வி: இது கேள்விவரை இங்கு வந்த எந்த மாநில முதல்வருக்கும் இல்லாத ஒரு பெரிய வரவேற்பு தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குக் கிடைத்து இருப்பதாக துபாய் அரசாங்கமே சொல்லியிருக்கிறது. நீங்களோ அங்கு நேரடியாகக் கலந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் பார்த்ததை வைத்து அது எப்படி இருந்தது என்று சொல்ல முடியுமா?
பதில்: திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி மறைந்த பிறகு, புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் திராவிட கொள்கையில் இருந்து சிறிதும் வழுவாமல் - தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் விட்டுச் சென்ற இடத்தில் நின்று, அதைத் தொடர்ந்து - அதே நேரத்தில் இன்றைய நவீன சவால்களுக்கும் முகம் கொடுக்கும் வகையில் அனைவரையும் அரவணைத்து, புதியதொரு பாணியில் தனது நடவடிக்கைகளை ஆரம்பம் முதலே அமைத்துக் கொண்டிருப்பது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த அழகான, அற்புதமான அணுகுமுறை அடிப்படையிலான அவரது அரசியல்தான் கடந்த இரண்டு தேர்தல்களில் அவருக்குப் பாரிய வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறது.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், சட்டசபையில் இவ்வளவு பெரிய பெரும்பான்மை பெற்று இருப்பதும், ஒவ்வொரு துறைக்கும் சரியான தகுதியுடைய அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை அமைத்து, அவர்கள் மிகுந்த செயல்திறனோடு செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் - அவை அனைத்தையும் தனது மேற்பார்வையில் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கக் கூடிய அவரது போக்கு, மாநில மக்கள் மட்டுமின்றி அவரை தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கக் கூடிய எங்களையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அவர் நியமித்திருக்கிற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களது நிதிநிலை அறிக்கையின் படி, தமிழகத்தின் பொருளாதாரத்தை அடுத்த பத்தாண்டுகளுக்கு 1 ட்ரில்லியன் டொலர் எனும் அளவில் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல இலக்கு வைத்திருப்பது ஒரு புரட்சிகரமான திட்டம் என பொருளாதார வல்லுனர்களால் பார்க்கப்படுகிறது.
மகளிர் சமூகத்தை மேம்படுத்துவதற்காக அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. தமிழகத்தின் 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சி மேயர் பொறுப்புக்கு பெண்கள் மட்டுமே வரும் வகையில் ஒதுக்கி அறிவித்திருக்கிறார். இது பெண்களுக்கான சமத்துவம் என்று சொல்வதை விட, அவர்களை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமாகவே நாம் கருத முடியும். இப்படியெல்லாம் செய்யும் ஒரு மாநில முதல்வரை இப்பொழுதுதான் பார்க்க முடிகிறது. ஆட்சிக்கு வந்து 10 மாதங்களே ஆன நிலையில் அவர் புரிந்திருக்கும் சாதனைகள் ஒரு மிகப்பெரிய இமாலய சாதனை என்றே சொல்ல வேண்டும்.
கேள்வி: துபாய் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீங்கள் முதல்வர் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்தீர்களா? அல்லது சென்னைக்கு வந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்திக்க திட்டம் எதுவும் இருக்கிறதா?
பதில்: அங்கிருந்த நெருக்கடியான நிகழ்ச்சி நிரல்களுக்கு இடையே தனிப்பட்ட முறையில் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றவில்லை. விரைவில் தமிழகத்திற்கு வந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, இருதரப்பு விவகாரங்கள் குறித்து சற்று நேரம் கருத்துப் பரிமாறலாம் என்று இருக்கிறேன். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை கடிதம் மூலம் சந்திக்க நேரம் கேட்க உள்ளேன். தமிழகத்தில் உள்ள இந்திய முஸ்லிம்கள் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் மூலமாக சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.
கேள்வி: "இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நாங்கள் முழு ஆதரவளிப்போம்" என்றும், "நெருக்கடி காரணமாக புலம்பெயர்ந்து இந்தியா வந்துள்ளவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்" என்றும் தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்திருக்கிறாரே? இது குறித்து உங்கள் கருத்தென்ன?
பதில்: இதில் ஒன்றும் வியப்பில்லை. காரணம், இது காலங்காலமாக அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்குத் தந்து கொண்டிருக்க கூடிய ஆதரவுதான். இலங்கையில் போராடி வந்த ஈழப் போராளிகளுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது காலத்தில் முழு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிச் செய்தமைக்காக 1977ஆம் ஆண்டு தனது முதல்வர் ஆசனத்தையே தியாகம் செய்தார் கலைஞர் அவர்கள். ஈழத்தமிழர்களுக்கு கலைஞர் தொடர்ந்து வழங்கி வந்த ஆதரவு காரணமாக, இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெறும் இரண்டு ஆசனங்களை மட்டுமே பெற்ற நிலையும் ஏற்பட்டது. அதற்குப் பிறகு கலைஞர் அவர்களது ஆட்சி வந்தாலும் கூட, ஈழத் தமிழர்களின் ஆதரவு நிலைப்பாடு என்ற ஒன்றுக்காக அவர் மிகப்பெரிய தியாகம் எல்லாம் செய்ததை யாரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள். இப்படியான தியாக வரலாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அந்த வழி நின்று செயல்பட்டுக் கொண்டிருக்க கூடிய தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் இலங்கையில் தமிழ் பேசக்கூடிய எல்லா மக்களுக்கும் தேவையான நலவுகளை இங்குள்ள ஒன்றிய அரசின் துணையோடு நிச்சயம் செய்வார் என்ற அழுத்தமான நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கு என தமிழக அரசு நிறைய உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அவர்கள் இங்கேயே குடியிருப்பதற்குத் தேவையான வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறது. இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடைய நிலைப்பாடு என்ன?
பதில்: போரால் பாதிக்கப்பட்டு இலங்கைத் தமிழர்கள் குடிபெயர்ந்து இந்தியா வந்துள்ள நிலையில் - அவர்களைக் குடியமர்த்த, அவர்களுக்குக் கல்வி வழங்க, அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்த தமிழக அரசு நல்ல பல திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போதைய முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் அதை இன்னும் சில படித்தரங்களுக்கு உயர்த்தி இருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் எல்லோருடைய மேம்பாட்டுக்காகவும் சில சிறப்பு அறிவிப்புகளையும் அவர் செயல்திட்டங்களாக அறிவித்திருக்கிறார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.
கேள்வி: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தபோது, 13ஆவது திருத்தச்சட்டம் குறித்து விவாதித்திருந்தார். அது பற்றி கூறுங்களேன்...
பதில்: அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்குப் புதியவரல்ல. தொண்ணூறுகளில் அவர் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் துணைத் தூதராகவும், சிரேஷ்ட ராஜதந்திரியாகவும் பதவி வகித்துப் பணியாற்றியிருக்கிறார். இதனால் இலங்கையில் உள்ள அரசியல் தொடர்புடையவர்களுக்கு அவருடன் நெருக்கமான இணக்கம் உண்டு. இலங்கையில் உள்ள இனப்பிரச்சினை தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விரிவாகத் தெரிந்து வைத்திருக்கக் கூடிய அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, இலங்கைக்கு வந்த நிகழ்வு - இது தொடர்பாக நல்ல பல முன்னேற்றங்களை நல்கும் என்ற நம்பிக்கை நாட்டு மக்களுக்கு இருக்கிறது.
13ஆவது சட்டத் திருத்தம் என்பது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்று. அதை பலவீனப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. குறிப்பாக தற்போது இலங்கையை ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் அதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள். இன்றும் கூட பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டாலும், அவையெல்லாம் காத்திரமாக நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கு இருந்து கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு, நடத்தவேண்டிய தேர்தலும் இதுவரை நடத்தாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் விவகாரமும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேசப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் இந்திய அரசு இலங்கையில் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்து, தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையை ஏற்படுத்தி இருப்பதை மாற்றியமைத்து, வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் உரிய அரசியல் பிரதிநிதித்துவத்துடன் தங்களுக்கு உரியதை இந்த நாட்டில் இருந்து பெற்றுக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி - கூட்டாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரிடம் நாங்கள் பேசியிருக்கிறோம்.
கேள்வி: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கை வருகையின்போது, 6 ஒப்பந்தங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கதாக, சீனாவுடன் ஏற்கனவே நிறைவேற்றிய அணுமின் நிலைய ஒப்பந்தத்தை இப்பொழுது இந்தியாவுடன் நிறைவேற்றி இருக்கிறார்கள். இதுகுறித்த உங்கள் பார்வை என்ன?
பதில்: இலங்கையை தற்போது ஆண்டு கொண்டிருக்கும் அரசாங்கம் ஏட்டிக்குப் போட்டியாக சீன - இந்திய அரசுகளை திருப்திப்படுத்தும் வகையில் இலங்கையின் சுயநிர்ணயத்துக்குப் பாதகமான விவகாரங்களில் விட்டுக்கொடுப்புகளைச் செய்கிறது என்ற பலத்த விமர்சனம் இந்த அரசின் மீது விழுகிறது என்பதற்கு - இதன் பலவீனமான வெளியுறவுத் துறைக் கொள்கையும் காரணமாக அமைந்திருக்கிறது.
பிராந்திய வல்லரசாக இருக்கக்கூடிய இந்தியாவின் பாதுகாப்புக்குக் குந்தகமான முடிவுகளை இந்த ஆட்சியாளர்கள் இதற்கு முன் எடுத்ததன் விளைவாகத்தான் இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் உபாய ரீதியான செயல்பாடுகளைப் புறந்தள்ள முடியாத நிலைக்கு இலங்கை ஆகியிருக்கிறது. இந்த நிலவரம் துவக்கத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் இட்ட பிழையினால் ஏற்பட்டது என்றுதான் நாங்கள் கூறி வருகிறோம். இந்தக் குறையைச் சரிசெய்யும் வகையில், இலங்கை - இந்திய உறவு என்பது தொப்புள் கொடி உறவு என்று வெறும் வாயளவில் மட்டும் கூறாமல் - சகல நிலைகளிலும் உறவை வளர்த்து மேம்படுத்துவதற்கான உபாய ரீதியான நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
என்னுடைய பேச்சுவார்த்தையின்போது, இந்தியாவிலும் - இலங்கையிலும் உள்ள பௌத்த மத தொடர்பாளர்களுக்கான தொடர்புகள் என்ற நிலையையும் தாண்டி, சகல மதங்களும் இலங்கையில் வேரூன்றுவதற்கு இந்தியாவிலிருந்து வந்த முன்னோடிகளும், மத போதகர்களும் செய்த போதனைகள், காட்டிய வழிகள் உள்ளிட்ட அவர்களின் பங்களிப்புகள் காரணமாக இருந்திருக்கின்றன. எனவே இலங்கையில் உள்ள சகல மதங்களும், சகல மதத்தினரும் பயன்பெறும் வகையில் பெருந்தன்மையுடன் கூடிய பரந்துபட்ட ஊக்குவிப்பையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கான இருதரப்பு உடன்பாடுகள் எட்டப்பட வேண்டும் என்பதை நாங்கள் அமைச்சரிடம் அழுத்தமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
கேள்வி: இலங்கையை ஆண்டு கொண்டிருக்கும் தற்போதைய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாகத் தெரிகிறதே? அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?
பதில்: இன்றைய இலங்கை அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது மட்டுமல்ல; அவர்களின் ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் கடுமையாகப் பெற்றுக் கொண்டிருக்கிறது. வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்குக் கூட நீண்ட வரிசையில் காத்திருந்தும், பன்மடங்கு விலை உயர்வை அனுபவித்தும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய இலங்கை நாட்டு மக்கள் - இந்த அரசு வெகு சீக்கிரமாக அகற்றப்படவேண்டும் என்ற கருத்து ஒற்றுமையில் இருக்கிறார்கள். பொதுவாக, நாட்டின் ஆட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் முக்கிய இடங்களுக்குச் செல்லும்போது கிடைக்கும் மரியாதை கூட இவர்களுக்குக் கிடைக்காமல் ஏளனமாகப் பரிகசிக்கப்படுகிறார்கள். அந்தளவுக்கு இந்த ஆட்சியாளர்கள் தாழ்நிலையில் ஆகிவிட்டார்கள். அதிலும் குறிப்பாக ஆட்சிக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் இவ்வளவு பெரிய மக்கள் அதிருப்தியை பெற்றிருக்கும் அரசு இந்த அரசாகத்தான் இருக்கும்.
இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு இவர்கள் இழைத்திருக்கும் மிக மோசமான, படுபாதகமான அநீதி - இன்று டொலருக்குச் சமானமான எங்கள் இலங்கை ரூபாயின் மதிப்பு பாரிய வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. இந்த நாட்டை எல்லா வகையிலும் பாதிக்கக்கூடிய அம்சமாக இது மாறிவிட்டது. இந்த நாட்டின் கடன் சுமை திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு ஆகிவிட்ட இந்தச் சூழலில், பிற நாடுகளிடம் அபயக் குரல் எழுப்பும் நிலைக்கு இலங்கை மக்களாகிய நாங்கள் தள்ளப்பட்டு விட்டோம். இந்தச் சிக்கல் நிலை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குக் கூட நீடிக்கலாம்.
எது எப்படியாயினும் இந்த இலங்கை நாடு வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக் கூடிய இயற்கை வளமிக்க நாடாகவும், பெருமுதலீட்டுக்கு உகந்த நாடாகவும் மீண்டும் மிளிரும், வளரும். அதற்கு, தற்போதைய பொருளாதார நிலைமை சிக்கலை ஏற்படுத்தி இருந்த போதிலும், இதையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தத் தருணத்தில் இந்தியாவிலிருந்து முதலீட்டாளர்கள் பெருமளவில் வந்து முதலீடுகள் செய்வதும், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து எங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுவதும் காலத்தின் கட்டாயம் என்று நாங்கள் கருதுகிறோம். அப்படி நடப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
கேள்வி: நிறைவாக ஒரு கேள்வி... புனித ரமழான் மாதம் வருகிறது. இம்மாதத்தில் நோன்பு நோற்றவர்கள் பேரீச்சம் பழத்தைக் கொண்டு நோன்பு துறப்பர். பேரீச்சம்பழத்துக்கான வரி சரியான அளவில் குறைக்க முடியாமல் இருக்கிறதே? இது குறித்து உங்கள் கருத்தென்ன?
பதில்: நோன்பு காலத்தில் பேரீச்சம் பழத்திற்கு வரி உயர்த்தப்பட்டு இருப்பது விமர்சனத்துக்குரிய ஒன்றுதான் என்றாலும் கூட, பொதுவாகவே இந்த நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துக்குமே இதுதான் நிலைமை. அத்தியாவசியப் பொருட்களான கோதுமை மாவு தட்டுப்பாடு, அரிசி விலை உயர்வு, சமையல் எரிவாயு கிடைக்காத நிலை என சகலமும் மூன்று மடங்குக்கு மேல் விலைவாசி உயர்ந்து மிக ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பதுதான் இன்றைய உண்மை. இந்த நாட்டின் அடித்தட்டு மக்கள் பசியிலும், பட்டினியிலும், பஞ்சத்திலும் வாடக்கூடிய அவலம். நடுத்தர வர்க்கத்தினரும் வரலாறு காணாத அளவில் பெரும் பாதிப்புகளை இப்பொழுது சந்தித்திருக்கிறார்கள்.
இப்படி ஒரு இக்கட்டான நிலையில் இந்திய அரசின் மானிய உதவிகள் அண்மைக் காலமாக தாராளமாக வந்தது எங்களுக்கெல்லாம் சற்று ஆறுதலைத் தந்திருக்கிறது. ஆனால் இலங்கையின் கடன் சுமையைக் குறைப்பதற்காக தொடர்ந்து இந்தியா உட்பட வெளிநாடுகளின் உதவிகளை மட்டும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது இலங்கை நாட்டை வளர்ச்சிக்குக் கொண்டு செல்லாது. இதை இந்த நாட்டு மக்கள் உணர்ந்து கொண்டு, இன்றைய இந்த மாபெரும் சீரழிவுக்குக் காரணமாக இரண்டு கொண்டிருக்கக் கூடிய இந்த ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை முன்னிறுத்தி நாட்டு மக்கள் பயணிக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே இந்த நாட்டு மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார்.
(நன்றி."மணிச்சுடர்"தமிழக நாளிதழ்- 1.4.2022).

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House