
posted 16th April 2022
இலங்கையில் வாகனங்களுக்குகான எரிபொருள் விநியோகம் தொடர்பில் சில வரையறைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக பொது மக்கள் தத்தமது வாகனங்களுடன் மிக நீண்ட கியூ வரிசைகளில் காத்து நின்றதை அவதானிக்க முடிந்தது.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் உட்பட எரிபொருள் விநியோகம் இடம்பெற்ற மேலும் சில பிரதேசங்களிலும் இத்தகைய வாகனங்களுடனான மிக நீண்ட கியூவரிசைகள் காணப்பட்டன.
குறிப்பாக இந்த மாவட்டத்தில் இறைக்கும் கொடும்வெய்யில் உஷ்ண நிலமைக்கு மத்தியிலும், மக்கள் நீண்ட கியூவரிசைகளில் காத்து நின்று எரிபொருள் நிரப்பும் பரிதாப நிலையும் குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பாக பொது மக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருட்களை கொள்வனவு செய்வதன் காரணமாக வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் சிலவரையறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன்படி தற்காலிகமாகக் கட்டண அடிப்படையிலான எரிபொருள் விநியோக நடைமுறை தற்சமயம் அமுலுக்கு வந்துள்ளது.
இதற்கமைய மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிகளுக்கு 1500 ரூபாவுக்கும், கார், வேன் மற்றும் ஜீப் போன்ற வாகனங்களுக்கு 5000 ரூபாவுக்கும் எரிபொருள் நிரப்புவதற்கான வரையறை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே தத்தமது வாகனங்களுடன் எரிபொருள் நிரப்புவதற்காக மிக நீண்ட கியூ வரிசைகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் காத்திருக்கும் அவலம் தோன்றியுள்ளது.
இதேவேளை தேவையினிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.
எனவே அனுமதி வழங்கப்படாத எந்தவொரு நபருக்கும் பீப்பாய்கள் மற்றும் கலன்களில் பெற்றோல் வழங்கப்படமாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற அவலங்களுக்கெல்லாம் விடிவுகாலம் எப்போது தான் பிறக்குமோவென இயல்பு வாழ்வை இழந்து நிற்கும் அப்பாவி மக்கள் அங்கலாய்த்த வண்ணமுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம்