
posted 14th April 2022
இந்திய இலுவைப் படகுகளால் எமது வட பகுதி மீனவர்கள் பாதிப்பு அடைந்து வருவது எமக்கு நன்கு தெரியும். இதை தடுப்பதில் கடற்படையினர் இயன்ற அளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆறு மாதங்களில் எட்டு இந்திய இலுவைப் படகுகளை கைப்பற்றியுள்ளொம் என தலைமன்னார் கடற்படை கமாண்டர் குமார இவ்வாறு பேசாலை மீனவ சமூகத்திடம் இவ்வாறு தெரிவித்தார்.
கடற்படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க ஞாயிற்றுக்கிழமை (10.04.2022) பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய பங்குத்தளத்தின் கேட்போர் கூடத்தில் பங்கு தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் பேசாலை மீனவ சமூகத்தினரும் கடற்படையினரும் கலந்து கொண்ட கூட்டத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இதன்போது தலைமன்னார் கடற்படை கமாண்டர் குமார மேலும் இங்கு தெரிவிக்கையில்;
இன்றைய நிலையில் இங்குள்ள மீனவர்களின் பாதிப்புக்கள் என்னவென்று எமக்கு நன்கு தெரியும்.
இந்திய இலுவைப்படகுகளால் நீங்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றீர்கள்.
இதை நாங்கள் தடுத்து நிறுத்துவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
சுமார் ஆறு மாதங்களுக்குள் நாங்கள் எட்டு இந்தியப் படகுகளை மன்னார் மற்றும் யாழ்ப்பாண கடற்பரப்புக்குள் கைப்பற்றியுள்ளோம்.
இந்த எட்டு இந்திய இலுவைப்படகுகளையும் நாங்கள் மன்னார் மற்றும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றங்களில் பாரப்படுத்தியுள்ளோம்.
ஒரே நேரத்தில் இங்குவரும் இந்திய இலுவைப்படகுகளை எம்மால் கைப்பற்ற முடியாது. இருந்தும் நாங்கள் முடிந்ததை செய்து கொண்டிருக்கின்றோம்.
அப்படி இருந்தும் அவர்கள் தொடர்ந்து வந்து செல்லுகின்றனர். நாங்கள் தொடர்ந்தும் எங்கள் பணியை முன்னெடுத்துச் செல்வோம்
அடுத்து மீனவர்களாகிய நீங்கள் இங்கு இன்னொரு பிரச்சனையை முன்வைத்தீர்கள். அதாவது, இங்கு மீனவர்களாகிய உங்களுக்கு இயற்கையால் ஏற்பட்ட எந்த அழிவுகளுக்கும் எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லையென தெரிவித்திருந்தீர்கள்.
உண்மையில் இவ்விடயத்தில் எமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. இருந்தும் நாங்கள் உத்தியோகபூர்வமாக பேசாவிடினும் மீனவர்கள் தொடர்பான கூட்டங்கள் நடைபெறுகின்றபோது உங்கள் இந்த விடயத்தை மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ