
posted 20th April 2022

எஸ்.எஸ். இராமகிருஷ்ணன்
மன்னார் பொது வைத்தியசாலை 125 வருட பழமைவாய்ந்த வைத்தியசாலையாக இருப்பினும், அதிதீவிர சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கே மன்னார் நோயாளிகள் செல்லும் நிலையை உணர்ந்தே மன்னார் லயன்ஸ் கழகம் மன்னார் வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை நிலையத்தை புனரமைக்கும் பணியாக மூன்றரைக் கோடி ரூபா நிதியில் ஒன்பது வகையான இலத்தினிரியல் உபகரணம் வழங்குகின்றது என பொறியியளாளரும், மன்னார் லயன்ஸ் கழக முக்கியஸ்தருமான லயன் எஸ்.எஸ். இராமகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இராமகிருஷ்ணன் இங்கு தொடர்ந்து உரையாற்றியபோது;
இவ் வைத்தியசாலையில் அதிதீவிர சிசிச்சை பிரிவு 2010 ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டது.
இப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டபோது, இதற்கு தேவையான முழுமையான வசதிகள் இன்றியே ஆரம்பிக்கப்பட்டது. இருந்தும், அதிகமான நோயாளிகள் இப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இக்குறைபாட்டை உற்றுக் கவனித்த மன்னார் லயன்ஸ் கழகம் இவ் வைத்தியசாலையின் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய, அத்தியாவசிய உபகரணங்களை அன்பளிப்பு செய்ய எடுத்த முயற்சியின் பலனாக எம்மால் இந்த உதவியைச் செய்ய முடிந்தது.
சுமார் இரண்டாயிரம் சதுர மீற்றர் பரப்பளவில் பல கிராமங்களை உள்ளடக்கிய மன்னார் மாவட்டமானது அங்கு வாழும் மக்களுக்கு மிகவும் முக்கியமான வைத்தியசாலையாகும்.
அத்துடன், அனைத்து தமிழ் மாவட்டங்களைப் போல, மன்னார் மாவட்டமும் கடந்த யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டதை நாம் அறிவோம்.
மேலும், எம்மாவட்டம் தொடர்ந்தும் பல சகாப்தங்களாக கவனிப்பாரற்று, ஒதுக்கப்பட்ட மாவட்டமாக இருப்பதால், அதிதீவிர சிகிச்சைக்காக நோயாளிகள் இன்றும் சுமார் 125 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள யாழ் போதனா வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது.
அப்பொழுது இருந்த மாவட்ட லயன்ஸ் கழக ஆளுநர் ராசீக் அவர்கள் மன்னாருக்கு வருகை தந்து இதன் நிலமையை நேரடியாக பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து சர்வதேச லயன்ஸ் கழகத்துடன் தொடர்பு கொண்டு ஒரு லட்சம் அமெரிக்கன் டொலர்ஸ் நிதிக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டு இவ்வுபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த சர்வதேச லயன்ஸ் கழகத்தின் நிதி திட்டத்தின் மூலம் ஒரு பாரிய திட்டத்தை முன்னெடுக்கப்படுகின்றோது இதில் 25 வீதம் மக்களின் பங்களிப்பு அமைய வேண்டும் என்பது ஒரு நியதியாகும்.
ஆனால் இந்த 25 வீதமான நிதியை மன்னார் லயன்ஸ் கழகம் மன்னார் மாவட்டத்தில் சேகரிக்க முடியாத நிலைமை இருந்தமையால், என்னுடன் தொடர்புகளில் இருந்த அவுஸ்ரேலியா எஞ்சினியர் அமைப்பும், அமெரிக்காவிலுள்ள ஐஎம்எச்ஓ என்ற அமைப்பும் தலா 12,500 அமெரிக்கன் டொலர்களை எமக்கு தந்துதவின.
இவ்வாறாக ஒதுக்கப்பட்ட நிதிதான் நாங்கள் எமது வைத்தியசாலைக்குக் லயன்ஸ் கழகச் சார்பாகக் கொடுத்துதவ முடிந்தது என்று இராமக்கிருஷ்ணன் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)