
posted 21st April 2022
“தேனாரம்” இணையத்திற்கு வழங்கிய விசேட நேர்காணல்
இலங்கை ஜனநாயக நாடு என்பதை உணர்ந்தும், மக்களின் கோரிக்கையை ஏற்றும் ஜனாதிபதியும், அரசும் பதவி விலக வேண்டும். அடம் பிடித்து, தனிசர்வாதிகாரப் போக்குடன் செயற்பட முற்பட்டால் மக்கள் ஏமாற்றத்துடன் மாற்று வழியைத்தேட முற்படுவதைத்தவிர்க்க முடியாது”
இவ்வாறு, கிழக்கிலங்கையின் சிரேஷ்ட அரசியல் வாதியும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹஸனலி கூறினார்.
“தேனாரம்” இணையத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
நாட்டில் ஜனாபதிபதிக்கு எதிராகவும், அவரது அரசுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்து தன்னார்வபோராட்டகளத்தில் குதித்து “கோட்டா கோ ஹோம்” தலைப்பில் முன்னெடுத்து வரும் போராட்ட நிலமைகள் தொடர்பாகவும், இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும் இந்த நேர்காணலின் போது கருத்துக்களை அவர் தேனாரம் மூலம் தெரிவித்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹஸனலி இந்த நேர்காணலின் போது தெரிவித்த கருத்துக்கள் இங்கு தொகுத்து தரப்படுகின்றது.
“நாடு இன்று பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இலக்காகி குட்டிச்சுவராகியுள்ளதுடன், நாட்டு மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை இழந்து சொல்லொணாத்துயரில் மூழ்கியுள்ளனர்.
இதன் காரணமாக நாட்டு மக்கள் இனமத பேதங்களுக்கப்பால் ஒன்றிணைந்து வீதிக்கு இறங்கி ஆட்சியினரை ஒதுங்கி வீட்டுக்குச் செல்லுமாறு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஆனால் தனக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் ஆணை தமக்கிருப்பதாகவும், அதனால் பதவிக்காலம்வரை தாமும், அரசும் ஆட்சியிலிருக்கப் போவதாக ஜனாதிபதி அடம்பிடித்த வண்ணமேயுள்ளார்.
ஆனால் அவ்வாறு வாக்களித்து ஆணைதந்த மக்களே வீட்டுக்கனுப்பவும், கங்கணம் கட்டி வீதிக்கு இறங்கிப் போராடுவதைக் கண்கூடாகக்கண்டும், அறிந்தும் ஆட்சியை விட்டுப் போகாது அடம்பிடித்த வண்ணமே ஜனாதிபதி உள்ளார்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு ஆட்சியினர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் அடம் பிடித்துக் கொண்டிருப்பது மக்களை ஏமாற்றும் சர்வாதிகாரப்போக்காகும்.
இந்த அரசின் வீண் விரயங்கள், பிழையான முகாமைத்துவம், நிருவாகச் சீர்கேடுகள் காரணமாக நாடு பின்தள்ளப்பட்டு வெளிநாடுகளின் நம்பிக்கையையும் இழந்துள்ளது.
முதிர்ந்த தேர்ச்சியுள்ள அரச நிருவாகிகள் புறந்தள்ளப்பட்டு, வெறும் இராணுவ சிவில் நிருவாகம் முன்னெடுக்கப்பட்டமையும் நாட்டின் பின்னடைவுக்கும், உதவிக்கரம் நீட்ட வேண்டிய வெளிநாடுகள் சந்தேகப்படவும் காரணமாகும்.
அத்தோடு ஆட்சியாளர்கள் நாட்டை முதன்மைப்படுத்தாமல், இனவாதத்தை முதன்மைப்படுத்தி குறிப்பாக சிறுபான்மையினர் மீது வெறுப்பைத் தூண்டிவிட்டு ஆட்சியைத்தக்க வைக்க முனைந்த முட்டாள்தன செயற்பாடும் நாட்டின் இன்றைய இழிநிலைக்குக் காரணமாகும்.
அதிலும் இந்த அரசு இனவாத அலைக்குத் தீமூட்டியதால் மிகமோசமாக முஸ்லிம் மக்களே பாதிக்கப்பட்டனர். அதில் ஜனாஸா எரிப்பு (கொவிட் மரணங்கள்) சம்பவங்களால் ஏற்பட்ட வலி முஸ்லிம் மக்களுக்கே புரியும்.
தற்போதய நிலையில், மக்களின் கோரிக்கையை ஜனநாயகப் பண்புடன் ஏற்று பதவி விலகாது, விடாப்பிடி தொடருமானால் பிரச்சினைகளைக் கூட்டுவதாகவே முடியும்.
அன்றேல், தமக்கு மக்கள் ஆதரவு உண்டு என மமதை கொண்டால், அரசைக் கலைத்துவிட்டு மக்களுக்கு மத்தியில் சென்று போட்டியிட்டு மீண்டும் ஆட்சிக்கு வரலாம்தானே! ஏன் இக்கட்டான நிலைக்கு நாட்டை இட்டுச் செல்ல வேண்டும்? மக்கள் தீர்ப்பைப் பெறுவதே வழியாகும்.
எனவே, போராட்ட களத்தில் நிற்கும் பெரும்பாலான சிங்கள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, புதிய இலங்கையை உருவாக்க இடமளித்து, ஜனாதிபதியும், அரசும் வழிவகுக்க வேண்டும்.
இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆரவாக 20ஆவது அரசியலமைப்பு திருத்திற்கு வாக்களித்த விவகாரம் கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீம் ஆரம்பத்திலிருந்தே சேர்ந்து ஆடும் திட்டமிட்ட நாடகமாகும்.
தலைவர் ஹக்கீமின் ஆசிர்வாதத்துடன் தான் நாம் அரசுக்கு ஆதரவளித்தோமென அந்த உறுப்பினர்கள் கூறிவருகின்ற போதிலும், இதுவரை தலைவர் ஹக்கீம் அதனை மறுக்காது, பதில் கொடுக்காது மௌனம் காப்பதிலிருந்தே இது நாடகமென்பது புரியும்” இவ்வாறு ஹஸனலி கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY