
posted 26th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வெடுக்குநாறிமலையில் கைதான எவரும் துன்புறுத்தப்படவில்லை - பொலிஸாரின் வாக்குமூலம்

வெடுக்குநாறிமலையில் கைதான எவரையும் தாம் தாக்கவில்லை என்றும் அரைநிர்வாண நிலையில் யாரையும் கைது செய்யவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வைத்து ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு நெடுங்கேணிப் பொலிஸ், வனவள திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளது.
நேற்று முன்தினம் புதன்கிழமை (24) வவுனியாவில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிமனையில் இந்த விசாரணைகள் நடைபெற்றன.
வனவளத் திணைக்களத்தினர் வழங்கிய வாக்குமூலத்தில்,
தாம் அங்கு சென்றபோது வனப் பகுதியில் தீ மூட்டப்பட்டிருந்தது. பிளாஸ்ரிக் பொருட்கள், சமையல் கழிவுகள் ஆலய பூசைப்பொருட்கள் கொட்டப்பட்டிருந்தன என்று கூறியிருந்தனர்.
பொலிஸார் அளித்த வாக்குமூலத்தில்,
தொல்பொருள் திணைக்களத்தின் கடிதத்தின் பிரகாரமும், வனப் பகுதிக்குள் தீ மூட்டப்பட்டமை காரணமாகவும் தாம் அவர்களை கைது செய்தனர் என்று கூறினர். அத்துடன், எவரையும் தாக்கவில்லை, யாரையும் அரைநிர்வாண நிலையில் கைது செய்யவில்லை என்று கூறினர்.
சிவராத்திரி தினமான கடந்த 8ஆம் திகதி பொலிஸார் வெடுக்குநாறிமலையில் கூடியவர்களில் 8 பேரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)