
posted 28th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வடக்கு, கிழக்கு பாடசாலைகளில் அதிகரிக்கும் அரசியல் ஆதிக்கம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ். மத்திய கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அதிபரை கூட மாற்றியிருக்கின்ற ஒரு செயல்பாடு நடந்திருக்கிறது.
இதேபோன்று தான் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலுள்ள தேசிய பாடசாலையான பட்டிருப்பு கல்லூரியிலும் அரசியல் தலையீடுகளுடனான சம்பவமொன்று இடம்பெற்றிருக்கிறது.
அங்கும் நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றி வேறு ஒருவரை தற்போது அதிபராக நியமித்திருக்கின்றனர்.
தமது அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை செய்ய முயல்வது உண்மையில் ஒரு தவறான செயல்பாடாகும்.
எனவே, பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)