
posted 22nd April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். மரியன்னை பேராலயத்தில் ஈஸ்டர் தாக்குதல் நினைவேந்தல்

2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொல்லப்பட்டவர்களின் ஐந்தாவது ஆண்டு நினைவேந்தல் யாழ். மரியன்னை பேராலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 5ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று ஞாயிறு நாடளாவிய ரீதியில்முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே, நேற்று யாழ்ப்பாணம் பெரிய கோயிலிலும் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. நேற்று நடந்த விசேட ஆராதனை நிகழ்வில் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தேவாலயத்தின் பிரதான மணி ஒலிக்கப்பட்டு கூட்டுத் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மறைமாவட்ட குருமுதல்வர் ஜெயரட்ணம் அடிகளார் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
அதனை தொடர்ந்து, உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து பிரார்த்திக்கும் முகமாக மெழுகுவர்த்திகளும் ஏற்றப்பட்டன.
இந்த நிகழ்வில், ஏராளமான கிறிஸ்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவினர் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)