
posted 25th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். நகரில் விபத்து ஓட்டோ சாரதி காயம்
யாழ் நகரை அண்மித்த நாலுகால் மடச் சந்தியில் நேற்று (23) செவ்வாய்க் கிழமை மதியம் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஓட்டோ ஒன்று பட்டா ரக வாகனத்துடன் விபத்துக்குள்ளாகி முற்றாக சேதமடைந்ததோடு ஓட்டோச் சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மானிப்பாய் - காரைநகர் பிரதான வீதியில் நாலுகால்மடம் சந்தியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலை ஒன்றில் இருந்து பிரதான வீதியில் ஓட்டோ பயணிக்க தொடங்கிய நிலையில் பின்புறமாக ஆறுகால்மடம் பகுதியில் இருந்து வருகை தந்த பட்டா ரக வாகனம் மோதியது.
இதன்போது ஓட்டோ முற்றாக சேதமடைந்தது. ஓட்டோவைச் செலுத்திய ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை, பட்டா ரக வாகனம் இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான மின் கம்பத்துடன் மோதிப் பகுதியளவில் சேதமடைந்த நிலையில் வாகனச் சாரதி காயங்களின்றி மீட்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)