
posted 3rd April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
மௌலவி ஆசிரியர்களை நியமிக்குக
கொழும்பு வலய முஸ்லிம்களின் கல்வி பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கை எடுக்கும் படி பணிப்புரை விடுத்தமைக்காக புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் இஸ்லாம் பாடம் கற்றுக்கொடுக்க மௌலவி ஆசிரியர்களை நியமிக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் முஸம்மில் அபூசாலி, அக்கட்சியின் சிரேஷ்ட ஆலோசகர் முபாறக் அப்துல் மஜீத் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டின் தலைநகரான கொழும்பின் முஸ்லிம் கல்வி என்பது நீண்ட பல வருடங்களாக அதள பாதாளத்தில் உள்ளது. கடந்த அரசாங்கங்களில் கொழும்பு முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இதற்கான உருப்படியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கொழும்பில் சுமார் நாற்பதினாயிரம் முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழியில் கற்கும் நிலையில் அவர்களுக்கு இஸ்லாம் பாடம் கற்பிக்க மௌலவி ஆசிரியர் எவரும் இல்லாத நிலை இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது இந்த மாணவர்களின் அடிப்படை உரிமை மீறலாகும்.
அதேபோல் சில பாடசாலைகளில் மௌலவி அல்லாத ஆசிரியர்கள் புத்தகம் பார்த்து இஸ்லாம் பாடம் கற்பிக்கும் நிலையும் உள்ளது. இது மாணவர்களுக்கு அவர்களின் சமயத்தை சரிவர கற்றுக்கொடுக்காத நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, கொழும்பு கல்வி வலயத்துக்கு இஸ்லாம் பாடம் கற்பிக்க உடனடியாக சிங்கள, தமிழ் மொழி மூல மௌலவி ஆசிரியர்களை நியமிக்க கட்டளை பிறப்பிக்கும்படி " புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்" கட்சி கௌரவ ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)