
posted 24th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மட்டு. சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொல்லப்பட்டோர் நினைவுகூரப்பட்டனர்.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொல்லப்பட்டவர்களின் ஐந்தாவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கொல்லப்பட்டோர் நினைவாக மலர்கள் தூவியும் மெழுகுதிரி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேவாலயத்தின் போதகர் மகேசன் ரொசான் தலைமையில் விசேட ஆராதனையில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி பிரார்த்தனையும் நடைபெற்றது.
இதேவேளை, குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட தேவாலயம் இதுவரை புனரமைக்கப்படாமல் மூடப்பட்ட நிலையில் உள்ளது. உயிரிழந்தவர்களின் உறவுகள் தேவாலயத்தின் நுழைவாயிலில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் இடம்பெற்றது. இந்தத் தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர். 80இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)