
posted 18th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
பாலித தேவரப்பெருமவின் இழப்பிற்கு ஹரீஸ் அனுதாபம்

பாலித தேவரப்பெரும இலங்கை அரசியலில் மனிதாபிமானியாகவும், ஜனரஞ்சக அரசியல்வாதியாகவும் பேசப்பட்டவர்.
அவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், முன்னாள் பிரதி அமைச்சராகவும் 2010 ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தை அலங்கரித்த சகோதரர் பாலித தெவரப் பெருமவின் இழப்பு எமது நாட்டின் மனிதாபிமான அரசியலில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.
பாலித குமார தெவரப்பெரும அவர்கள் இலங்கை அரசியலில் நாட்டின் சகல மக்களாலும் மனிதாபிமானியாகவும், ஜனரஞ்சக அரசியல்வாதியாகவும் பேசப்பட்ட ஒருவராவார். மத்துகம பிரதேச சபையின் தலைவராக, மேல் மாகாண சபை உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, உள்நாட்டு அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராக, வன விலங்கு பிரதி அமைச்சராக பணியாற்றிய அவர் குறிப்பிடத்தக்க சேவைகளை மக்களுக்கு செய்துள்ளார்.
நாட்டு மக்கள் கஷ்டப்பட்ட போது இன, மத, பிரதேச பாகுபாடுகளில்லாது வீதிக்கு இறங்கி மக்கள் தொண்டாற்றிய அவரின் திடீர் இழப்பு பலத்த கவலையை என்னுள் மட்டுமல்ல நாட்டில் உள்ள சகலருக்கும் தோற்றுவித்துள்ளது.
அவரின் இழப்பினால் துயருற்ற அவரது குடும்பம், நண்பர்கள், ஆதரவாளர்கள் எல்லோருக்கும் எனது ஆறுதல்களையும், எனது இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)