
posted 23rd April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பலவகைச் செய்தித் துணுக்குகள்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடுப் பகுதியில் வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக நேற்று (22) திங்கட்கிழமை மீட்டெடுக்கப்பட்டார்.
உயிரிழந்தவர் கிருஸ்ணன் கிருஸ்ணராசா எனும் 52 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குடும்பஸ்தர் குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ஓட்டோ - வான் - மோட்டார் சைக்கிள் என மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
வவுனியா - பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (21) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில், துரைசாமி லலிதராசா என்பவரே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
பாடசாலை அருகே இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர். இருவரும் வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஒருவர் அநுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். ஆனால், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி மரணமானார்.
விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீந்தி கடக்க முயன்ற இந்தியாவின், பெங்களுரைச் சேர்ந்த 78 வயதுடைய முதியவர் நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீற்றர் தூரம் கொண்ட பாக்கு நீரிணைப் பகுதியை சமீப காலமாக பல நீச்சல் வீரர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனைவரையான தூரத்தை நீந்தி கடப்பதற்காக இந்திய - இலங்கை இரு நாட்டு அரசாங்கத்திடம், உரிய அனுமதி பெற்று நேற்று முன் தினம் (22) திங்கட்கிழமை 31 பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு வருகை தந்துள்ளது.
அங்கிருந்து நேற்று (23) செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து தொடர் ஓட்டம் முறையில் இந்தக் குழுவினர் நீந்தத் தொடங்கியுள்ளனர்.
இதன்போது சுமார் மூன்று மணி அளவில் தொடர் ஓட்ட நீந்துதலில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியாவின், பெங்களுர் மாநிலத்தைச் சேர்ந்த 78 வயதுடைய கோபால் ராவ் என்பவருக்கு திடீரென நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு, மாரடைப்பினால் குறித்த முதியவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கோபால் ராவ் உடல், தனுஷ்கோடி பாலம் மீன்பிடித் துறைமுகத்துக்கு எடுத்து செல்லப்பட்டயடுத்து, உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடன் வந்த நபர் ஒருவரின் இந்த உயிரிழப்பால், ஏனைய 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையான சாதனையைக் கைவிட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)