
posted 14th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
நல்லாட்சியிலேயே கல்முனை வடக்கு செயலகத்தை வென்றிருக்கலாம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதயசுத்தியுடன் செயற்பட்டிருந்தால், அவர்கள் ஆதரவு வழங்கிய நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை வெற்றி கொண்டிருக்கலாம் என்று கல்முனை ஐக்கிய வணிகர் சங்க நிர்வாக சபை உறுப்பினர் கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான போராட்டம் தொடர்பாக பாண்டிருப்பு அலுவலகத்தில் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
கல்முனை வடக்கு பிரதேச செயலகத் தீர்விற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் தூய மனதுடன் பங்குபற்றி இருந்தேன். அந்த போராட்டத்தில் சிலர் குள்ள நரி போன்று செயற்பட்டார்கள். அவ்வாறான குள்ளநரி கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்ற போராட்டத்திலும் இருப்பதாக அறிகின்றேன்.
சிலர் இப்போராட்டத்தில் இணைந்துகொண்டு குளிர் காயப் பார்க்கின்றார்கள். தற்போது அப்போராட்டத்திற்கு வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கருணா அம்மான் இல்லாமல் செய்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். அத் தேர்தலில் கருணாவுக்கு அம்பாறை மாவட்ட மக்கள் சுமார் 31000 வாக்குகளை வழங்கி இருந்தார்கள்.
உறவுகளின் துயர் பகிர்வு
இவ்வாறு கருணாவுக்கு வாக்குகளை மக்கள் அள்ளி வழங்கக் காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரையே சாரும். 1977 முதல் 2019 ஆம் ஆண்டு வரை மக்கள் தமிழரசுக் கட்சிக்கே அதிகளவாக வாக்களித்து வந்திருக்கின்றார்கள். ஆனால், மக்களிற்கு எவ்வித நன்மைகளும் தமிழரசுக் கட்சியினால் கிடைக்கவில்லை. கடந்த காலங்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை தமிழரசுக் கட்சி ஒரு ஏமாற்று வேலையாகவே செயற்படுத்தி வந்தது.
2015 ஆண்டு ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து இதே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸூடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைத்தார்கள். இதன்போது மாகாண சபையில் இருந்து 2 அமைச்சுக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை முன்வைத்து தீர்வைப் பெறவில்லை.
அவ்வாறே 2015 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் 15 பாராளுமன்ற ஆசன ஆதரவுடன் நல்லாட்சி அரசாங்கம் என்ற வண்டி ஓடிக்கொண்டிருந்தது. ஆளுங்கட்சிக்கு வழங்கப்பட்ட கம்பெரலிய திட்டத்தின் ஊடாக இவர்களுக்கும் பல கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. இப்பிரதேச செயலக பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கவில்லை.
இவ்வாறு தமிழ் மக்களுக்கு பல்வேறு துரோகங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்திருக்கின்றார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
உறவுகளின் துயர் பகிர்வு

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)