
posted 26th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் அரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்ப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கு நேற்று (25) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஐந்தாவது எதிராளியான சண்முகம் குகதாசன் நேற்றும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. திருகோணமலையில் அவரது சரியான முகவரிக்கு மீண்டும் அழைப்பு கட்டளை அனுப்புவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்போது முதலாம் மற்றும் மூன்றாம் எதிராளிகள் தரப்பு சார்பில் வாதாடிய சிரேஷ்ட சட்டத்தரணி ந. சிறீகாந்தா தங்கள் தரப்புக் கருத்துகளை முன்வைக்கக் கால அவகாசம் கோரினார்.
இதனையடுத்து எதிராளிகள் தமது சமர்ப்பணங்களை முன்வைக்க அவகாசம் வழங்கி ஜூன் 20ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மே 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)