
posted 28th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழக மீனவர்கள் மூவரின் சிறைத் தண்டனை இரத்து
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவ படகோட்டிகள் மூவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை இரத்து செய்யப்பட்டது.
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்தபோது கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகோட்டிகள் மூவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையானது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் நேற்று முன்தினம் (26) வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
இலங்கை கடற்பரப்புக்குள் பெப்ரவரி 12 மற்றும் 22 ஆம் திகதிகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களில், படகோட்டிகள் என்ற அடிப்படையில் மூவருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றினால் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த மீனவர்கள், சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தனர்.
இந்நிலையில் மேன்முறையீடு செய்யப்பட்ட வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி டி. எவ். சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே மூவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுவிக்குமாறு நீதிபதியால் உத்தரவிடப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)