
posted 20th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
ஜனாதிபதித் தேர்தல் நடக்குமா? - விக்னேஸ்வரன்

ஜனாதிபதித் தேர்தல் வருகின்றதோ இல்லையோ நானறியேன். அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுமோ என்றும் கூறமுடியாது - இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கட்டமைத்த இனவழிப்பும் தமிழ் மக்களின் இன சுத்திகரிப்பும் (Structural Genocide and Ethnic Cleansing of Tamils in Sri Lanka) ஆங்கில நூல் வெளியீடு நல்லூரிலுள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகத்தின் வாசஸ்தலத்தில் நேற்று (19) நடைபெற்றது. இதில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;
இதுவரை காலமும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநியாயங்களை (தெரிந்த அளவுக்கு ஆங்கிலத்தில்) ஆவணப்படுத்தியுள்ளோம். இந்நூலின் தமிழ் மற்றும் சிங்கள மொழி பெயர்ப்புக்கள் விரைவில் வர இருக்கின்றன. எனினும் பிறநாட்டு நல்லறிஞர்களுடனும், இராஜதந்திரிகளுடனும் ஐக்கிய நாடுகள் போன்ற உலகக் கட்டமைப்புகளுடனும் எமது நிலையை அவர்கள் புரிந்து கொள்ளவும் இனிவருங்காலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கில் பொது மக்கள் வாக்கெடுப்பு ஒன்றை ஐக்கிய நாடுகள் நிகழ்த்தவும் எமது உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் எமது நிலை பற்றிய ஒரு கைநூலை கொண்டிருக்கவும் ஏதுவாக இந்த நூலை தற்போது வெளியிடுகின்றோம்.
ஜனாதிபதித் தேர்தல் வருகின்றதோ இல்லையோ நானறியேன். அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுமோ என்றும் கூறமுடியாது. தற்போதைய அரசாங்கம் மேலும் தொடர பொது மக்கள் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படுமோ நானறியேன். ஆனால் எமது தமிழ் மக்கள் நிலைபற்றிய ஆவணத்தை தற்போது வெளியிடுவது தான் சாலச் சிறந்தது என்று நாம் கருதுகின்றோம்.
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் ஆவணங்களாக இதுவரையில் இரண்டு முக்கிய ஆவணங்கள் வெளிவந்துள்ளன. முதலில் 30 வருட அஹிம்சை வழிப் போராட்டத்தின் பின்னர் 1976இல் வெளியிடப்பட்ட வட்டுக் கோட்டைப் பிரகடனம். அடுத்து 30 வருட ஆயுதப் போராட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட வடமாகாணசபையின் 2015ஆம் ஆண்டின் இனவழிப்பு திர்மானம்.
தற்போதைய நூல் மேற்கண்ட இரு ஆவணங்களின் தொடர்ச்சியாகவே வெளியிடப்படுகின்றன. அதாவது இதுவரையில் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநியாயங்களை முழு விபரங்களுடன் உரிய அடிப்படை ஆராய்வு நூல்களின் விபரங்களுடன் வெளியிட்டுள்ளோம்.
இதன் உள்ளடக்கங்களை வாசித்து அறிபவர்கள் ஓரளவு எம் மக்களுக்கு இதுகாறும் நடந்த அநியாயங்களை, அட்டூழியங்களை புரிந்து கொள்வார்கள். எமது இந்த நூலின் குறிக்கோள் நடந்தவற்றைத் தெரியப்படுத்தலும் தெளிவான நடவடிக்கைகளை அரங்கில் ஏற்படுத்தலுமாவன. சிங்களவர், தமிழர். புலம்பெயர்ந்தோர், சர்வதேச மக்களும் நிறுவனங்களும், அண்மைக் காலங்களில் இலங்கையில் நடந்தேறியவை எவை, யார் அவற்றின் சூத்திரதாரிகள், அவற்றை எவ்வாறு அவர்கள் நடத்தியுள்ளார்கள் என்று அறிந்து கொள்ளும் வகையில் அத்தியாயங்களை ஒழுங்குபடுத்தி தற்போதைக்குக் கிடைத்த விபரங்கள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளார் ஆசிரியர்.
மக்கள் யாவர்க்கும் எமக்கு நடந்தவற்றை நடப்பவற்றை தெரியப்படுத்தல் இதன் நோக்கம். பலர் நடந்தவற்றை அறியாமலேயே தமது கருத்துக்களைத் தெரிவிப்பார்கள். அது தவறு. இந் நூலைப் படித்துவிட்டு அவர்கள் தம் கருத்துக்களை வெளியிடட்டும்.
அடுத்து பொறுப்புக் கூறல், நீதியைப் பெறுதல், வடகிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேசத்துக்கு எடுத்தியம்பி வலியுறுத்தி எமக்கான பொது மக்கள் வாக்கெடுப்பை உறுதி செய்வது போன்றவை எமது நோக்கம்.
பொது வாக்கெடுப்பை தாமதமின்றி இயற்றுதல் அவசியம். ஏற்கனவே தமிழர்தம் வடகிழக்கு பாரம்பரிய இடங்கள் பல பறிபோய் வேற்று இனத்தவர் அங்கு குடிகொண்டுள்ளார்கள். இங்கு நடக்கும் அரச மற்றும் அரச சார்புப் படைகள் மற்றும் வேற்று இனத்தவர்களின் நடவடிக்கைகளினால் எமது மக்கள் பலர் வெளிநாடுகளைத் தஞ்சமடைந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படியே போனால் வாக்களிக்க தமிழ் மக்கள் இவ்விருமாகாணங்களிலும் மிகவும் குறைந்து விடுவார்கள். இதை எண்ணியே இந் நூலை வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் புலம்பெயர் எமது உறவுகளுக்கும் அறிமுகப்படுத்த எண்ணியுள்ளோம். இவ்வாறான ஒரு கைநூல் தமிழ் மக்கள் தமக்கு நேர்ந்த அவலங்களை அறிந்துகொள்ள மிகவும் உதவுகின்றது.
பல இடங்களில் சிங்களத் தலைவர்கள் எம்மிடம் கேட்கும் கேள்விதான் மற்றைய இலங்கை மக்களுக்கு ஏற்படாத அவலங்கள் பலவற்றைத் தமிழ் மக்கள் அனுபவித்துள்ளார்கள் என்பது. நாம் இதுவரையில் சிலவற்றை எடுத்தியம்பினாலும் இனி வருங்காலத்தில் இந்த நூலை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி "இதை வாசியுங்கள். உங்களுக்குப் புரியும்" என்று கூறி இருக்கின்றோம்.
இன்றைய கால கட்டத்தில் நாம் மூன்று பரிமாணங்களில் இருந்து நடப்பவற்றை நோக்க வேண்டியுள்ளது.
பூகோளம் சார்ந்த கோணம். அடுத்து இலங்கையினதும் பரிமாணக் கோணம். கடைசியாக வடகிழக்குத் தமிழ் மக்களின் தற்போதைய நிலை பற்றிய கோணம்.
உலகம் மூன்றாவது உலக மகா யுத்தத்தை எதிர்நோக்கியுள்ளது. எம்மைப் பற்றி சர்வதேசம் வெகுவாகக் கரிசனை காட்ட முடியாத நிலையே பூகோளப் பரிமாணமாக இன்று உள்ளது.
ஆனால் அவர்களுக்கு இங்கு நடந்தவற்றை நடப்பவற்றைக் கூறிக் கொண்டேயிருக்க வேண்டும். அவ்வாறு கனடா நாட்டில் எம்மவர் அறிவுறுத்தலின் மேல் அறிவுறுத்தல் கொடுத்துக்கொண்டு இருந்ததால்தான் இன்று அந்நாடு எமக்கு நடந்தவற்றை அரங்கில் எடுத்துக்கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் நாம் பூகோளச் சமூகத்திற்கு எம்மைப் பற்றிய விபரங்களைத் திரட்டி அனுப்பக் கடமைப்பட்டுள்ளோம். அதையே இன்றைய அறிமுக நூலின் ஆசிரியர் செய்துள்ளார்; நாம் செய்துள்ளோம்; எமது கட்சி செய்துள்ளது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)