
posted 28th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சிவராம் நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராக்கி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவுதினம் நேற்றையதினம் (27) சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு ஊடகத்துறைக்காக தமது இன்னுயிரை தியாகம் செய்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு பின்னர் பாராளுமன்றத்துக்கு அருகில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)