
posted 26th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஓய்வூதியர் வருடாந்தப் பொதுக்கூட்டம்
அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதிய நிந்தவூர் பிரதேசக்கிளையின் 21 ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி (28.04.2024) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்றது.
ஓய்வூதியர் நம்பிக்கை நிதிய நிந்தவூர்க்கிளைத் தலைவர் ஏ.எல். மஹ்றூப் தலைமையில், நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலை மர்ஹ{ம் அஷ்ரப் ஞாபகர்த்த மண்டபத்தில் கூட்டம் நடைபெறும்.
கூட்டத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
அத்துடன் நிந்தவூர் பிரதேச செயலக கணக்காளர் எஸ்.எல். சாஜிதா பர்வீன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், ஓய்வு பெற்ற வைத்திய அதிகாரி ஏ.எம். ஜாபிர் அம்பாறை மாவட்ட அரச சேவை ஓய்வுதியர் நம்பிக்கை நிதிய செயலாளர் ஏ. உதுமாலெவ்வை, எம்.ரி. நௌபல் அலி (அதிபர்) ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் ஓய்வூதியர் நம்பிக்கை நிதிய நிந்தவூர் பிரதேச கிளையில் நீண்டகால உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் சேவையாற்றியமைக்காக இந்த வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் நால்வர் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளதாக நிந்தவூர் ஓய்வூதியர் நம்பிக்கை நிதிய கிளைச் செயலாளர் தேசமானிய எம்.ஏ. அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
இதன்படி நிந்தவூர் நலன் புரிச்சபையின் தலைவரும், ஓய்வு பெற்ற மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளருமான எம்.எச்.யாகூப் ஹஸன், ஓய்வு நிலை நீதிமன்ற முதலியார் ஏ.எஸ்.இப்றாகீம், ஓய்வு நிலை விரிவுரையாளர் ஏ.எல்.எம்.பஸீர், ஓய்வு நிலை அதிபர் கலாபூஷணம் எம்.செயினுலாப்தீன் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் செயலாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
தவிரவும் அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதிய நிந்தவூர்பிரதேசக் கிளையின் கோரிக்கையை ஏற்று, கிளைக்கென நிரந்தர கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு, நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல்லாத்தீப் காணித்துண்டு ஒன்றை அண்மையில் ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.
50 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்டு நிந்தவூர் தக்குவா சதுக்கத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இந்தக் காணியில், நூலகம், ஓய்வூதியர் பொழுதுபோக்கு அம்சங்கள், கூட்ட மண்டபம் கொண்ட நிரந்தர அலுவலகக் கட்டிடமொன்றை நிர்மாணிக்கத்திட்டமிடப்பட்டுள்ளதாக செயலாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
கடந்த வாரம் இந்தக் காணியை அடையாளப்படுத்தும் வகையில், மேற்படி ஓய்வூதியர் நம்பிக்கை நிதிய கிளைப் பெயர்ப்பலகையை பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லத்தீப் வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.
அரச சேவை ஓய்வூதியர்களின் முக்கியத்துவம் கருதி மேற்படி காணியை ஒதுக்கீடு செய்துள்ளமைக்காக நம்பிக்கை நிதிய நிந்தவூர்க்கிளை பிரதேச செயலாளருக்குப் பெரு நன்றி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)