
posted 17th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
ஏழைகளின் காவலன் பாலித்த தேவரப்பெரும காலமானார்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தேவரப்பெரும மின்சாரம் தாக்கி தனது 64 வயதில் காலமானார்.
வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.
பாலித தெவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார்.
அரசியலுக்கு அப்பால் பாலித எனும் ஒரு மனிதநேயம் மிக்க மனிதனை இந்த நாடு இழந்துள்ளது. தேசத்திற்கும் இது ஒரு பாரிய இழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா விடுத்துள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனது 30 வருடகால அரசியல் வரலாற்றில் பாலித தேவர பெருமை போன்ற ஒரு பணிவான, உணர்ச்சிமிக்க, அடி மட்ட மக்கள் பிரதிநிதியை நான் கண்டதில்லை. அவர் ஒரு மனிதாபிமானமுள்ள ஒரு உண்மையான மனிதர். அவரது வழியில் என்றும் தனித்துவம் மிக்கவர். மக்களோடு மக்களாக ஒன்றித்து அடி மட்டத்தில் இருந்து பணியாற்றும் மக்கள் சேவகன் ஆவார்.
எந்நேரமும் எல்லோருடனும் புன்னகை பூத்த முகத்துடன் அன்பாக உரையாடும் தன்மை கொண்டவர். கடந்த நல்லாட்சி அரசில் சமூக வலுவூட்டல் அமைச்சின் இராஜாங்க அமைச்சராக நானும் அதன் பிரதி அமைச்சராக அவரும் செயட்பட்டோம். அவர் இன வாதம், பிரதேச வாதம் எல்லாம் கடந்து மனிதநேயத்தை நேசிக்கும் ஒருவராக என்றும் செயற்பட்டு வந்த ஒருவர் ஆவார். .
இன்று இவரது எதிர்பாராத திடீர் இழப்பு செய்தியை அறிந்து மிக அதிர்ச்சி அடைந்தேன். முழு நாடும் ஒரு மனிதநேய பண்பாளனை இழந்த செய்தியால் துயரம் அடைந்து நிற்கிறது. அவரது இழப்பால் நிலைகுலைந்து நிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)