
posted 20th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
இலங்கைக்கான தங்கப்பதக்கம் வென்றெடுத்த முதலாவது தங்கமெய்வல்லுநர் ஜாம்பவான் எதிர்வீரசிங்கம் காலமானார்

இலங்கைக்காக ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்தவரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.
மெய்வல்லுநரும் கல்வியியலாளருமான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் ஒலிம்பிக், ஆசிய தடகள போட்டி, பொதுநல்வாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
உயரம் பாய்தல் வீரரான இவர் 1954 (மணிலா), 1958 (ரோக்கியோ), 1962 (ஜகார்த்தா) ஆசிய தடகளப் போட்டிகளில் பங்கேற்றார். 1954 போட்டியில் 1.95 மீற்றர் உயரம் பாய்ந்து உலக சாதனையை படைத்தார். எனினும், அந்தப் போட்டியில் அவரால் 4ஆம் இடத்தையே பெறமுடிந்தது.
1958இல் ஜப்பான் தலைநகர் ரோக்கியோவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கமாக இது அமைந்தது.
1962ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசிய தடகள போட்டியில் உயரம் பாய்தலில் வௌ்ளிப் பதக்கம் வென்றார்.
தவிர, 1952, 1956ஆம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக எதிர்வீரசிங்கம் பங்கேற்றிருந்தார். 1958இல் நடந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டியிலும் இவர் பங்கேற்றிருந்தார்.
யாழ்ப்பாணம் - பெரியவிளானை பிறப்பிடமாகக் கொண்ட நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை காலத்திலேயே உயரம் பாய்தலில் பல சாதனைகளை இவர் படைத்திருந்தார். அத்துடன், கிரிக்கெட் வீரராகவும் அவர் விளங்கினார்.
சியாரா லியோன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது 1973இல் காம்பியா நாட்டுக்கு எதிராக கிரிக்கெட் போட்டியிலும் விளையாடியிருந்தார். அந்தப் போட்டியில் அவர் உபதலைவராக பணியாற்றியிருந்தார்.
தவிர, இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றிய இவர், யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)