
posted 28th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
விழிப்புடன் செயற்படுவோம்
எமது எதிர்கால சந்ததியினராகிய பாடசாலை மாணவர்களின் மத்தியில் ஏதோ ஒருவகையில் போதைப் பொருள் பாவனை ஊடுருவிக் கொண்டிருக்கின்றது..இதனையிட்டு சமூகத்திலுள்ள அனைவரும் விழிப்புடனும், பொறுப்புடனும் செயற்பட்டு இந்த அபாயகரமான சூழலில் இருந்து எமது நாளைய சந்ததியினரைப் பாதுகாக்க முன்வர வேண்டியது காலத்தின் கட்டாய கடமையாகும்.
இவ்வாறு கல்முனை கல்வி வலயத்தின் திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வரணியா சாந்தரூபன் குறிப்பிட்டார்.
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 2023ஆம் ஆண்டுக்கான ஓ.எல்.தினவிழா இப் பாடசாலை அதிபர் செ..கலையரசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்தது சிறப்பித்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வரணியா சாந்தரூபன் அங்கு மேலும் பேசுகையில்;
தற்சமயம் கல்வி முறைமையானது ஆசிரியர் மையக் கல்வி மாணவர் மையக் கல்வி என்பவற்றிலிருந்து மாற்றமடைந்து செயற்பாட்டு மையக் கல்வியாக மாறியுள்ளது இதற்கேற்ப எமது மாணவர்களின் மொழியறிவு தகவல் தொழில் நுட்ப அறிவு என்பவற்றை விருத்தி செய்ய ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்.
இன்று இப் பாடசாலையில் கணித பூங்கா சிறப்பாக அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப் பூங்காவை சகல மாணவர்களும் பயன்படுத்தி கணிதம் கசப்பான பாடமல்ல அது இனிப்பான பாடம் என்ற நிலைக்கு வரவேண்டும். இதேவேளை ஏனைய பாடசாலை மாணவர்களும் இந்த பூங்காவை இப் பாடசாலை அதிபரின் அனுமதியுடன் பயன்படுத்திப் பயன் பெற வேண்டும்.
புகழ் பூத்த பலர் இப் பாடசாலையின் பழைய மாணவர்களாகவுள்ளனர். அஃதே சிறந்த நிர்வாகத் திறன்மிக்க அதிபரும் அர்ப்பணிப்பான ஆசிரியர்களும் இங்கு உள்ளமை மாணவர்கள் பெற்ற பெரும் பேறாகும் எனவே, மாணவர்கள் எதிர்வரும் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அனைவரதும் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமென்றார்.
இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பே. சச்சிதானந்தம் கௌரவ அதிதியாகவும், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. சஞ்சீவன் விசேட அதிதியாகவும், அதிபரும் ஊடகவியலாளருமான செல்லையா பேரின்பராசா, பிரபல தொழிலதிபர் புரவலர் க. பிரகலதன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த விழாவை சிறப்பிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஓ.எல்.விழாவில் வெளியிடப்படடும் "உரைகல்" சிறப்பு மலர் வெளியிடப்பட்டதுடன் அதிதிகள் யாவரும் நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)