
posted 29th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். சிறையில் தாக்குதலுக்கு உள்ளான இரண்டு கைதிகள் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணச் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்து இரண்டு விளக்கமறியல் கைதிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை அவரது தாயார் பார்வையிடச் சென்ற சமயம் அவருக்கு பீடி வழங்கியுள்ளார்.
அதனைச் சிறைக் கூடத்திற்குள் வைத்திருந்தவேளை, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கண்டறிந்து, அவற்றைப் பறிக்க முயன்றவேளை முரண்பாடு ஏற்பட்டு, விளக்கமறியல் கைதியை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பீடி வைத்திருந்த தகவலை தமக்கு வழங்கவில்லை என அந்த சிறைக்கூடத்தில் இருந்த மற்றையவரையும் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில், தாக்குதலுக்கு இலக்கான இருவரும் வழக்கு தவணைக்காக யாழ்.நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்றவேளை, தம் மீதான தாக்குதல் தொடர்பில் மன்றில் தெரிவித்தனர்.
அதனை அடுத்து இருவரையும் சிகிச்சைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதித்து, சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தி மருத்துவச் சான்றிதழ் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)