
posted 30th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தொழிலாளர்களுக்காக கல்முனை சந்தையை மூடத் தீர்மானம்

உலகளாவிய ரீதியில் தொழிலாளர்களுக்கான விடுமுறை நாளாக அனுஷ்டிக்கப்படுகின்ற மே தினத்தன்று, 1ஆம் திகதி புதன்கிழமை, கல்முனை மாநகர பொதுச் சந்தையை முழுமையாக மூடுவதற்கு இப்பொதுச் சந்தை வர்த்தக சங்கம் தீர்மானித்திருப்பதாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல். கபீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் முக்கிய பொருளாதார மையமாகத் திகழ்கின்ற கல்முனை மாநகர பொதுச் சந்தையின் வரலாற்றில் தொழிலாளர் சுதந்திர தினத்தை மையப்படுத்தி சந்தையை முழுமையாக மூடி தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கப்படுவது இதுவே முதன்முறையான சந்தர்ப்பமாகும்.
கடந்த காலங்களில் இந்த சந்தையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மே தினத்தன்று விடுமுறை வழங்கப்படாமல் இருந்து வந்தமை அவர்கள் மத்தியில் மிகவும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு இம்முறை அவர்களது உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இச்சந்தையை முழுமையாக மூடி, அனைத்து வியாபார நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கு சந்தை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
ஆகையினால் இச்சந்தையின் முதுகெலும்பாகத் திகழ்கின்ற தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிப்பதற்காக கல்முனை மாநகர பொதுச் சந்தையில் தொழில் புரியும் முதலாளிமார்கள் இத்தினத்தன்று தமது வர்த்தக தளங்களை திறக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறு சந்தை வர்த்தக சங்கம் வலியுறுத்துக் கேட்டுக் கொள்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Galleryயில் உள்ள படங்களைக் கிளிக் செய்து பெரிதாகப் பாருங்கள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)